சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பழமையான மயில் சிலை மாயமான வழக்கில், டிவிஎஸ் நிறுவனத்தின் வேணு சீனிவாசனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் அக்டோபர் 14-ந் தேதி விசாரித்தது. இந்த விசாரணையின்போது இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகம் குறித்தும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவனநாதர் சன்னதி உள்ளது. இங்கு மயில் தனது அலகில் மலரை வைத்திருப்பது போன்ற பழமையான சிலை இருந்ததாகக் கூறப்படுகிறது.
2004-ம் ஆண்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றபோது இந்தப் பழமையான சிலை அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக அலகில் பாம்பை வைத்திருக்கும் மயில் சிலை நிறுவப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக ஆன்மீக செயற்பாட்டாளர் ரங்கராஜன் நரசிம்மன் 2018-ம் ஆண்டு புகார் கொடுத்தார். இதனையடுத்து தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. கோவில் திருப்பணிகளை மேற்பார்வையிட அரசு அமைத்த குழுவில் இடம்பெற்றிருந்த டிவிஎஸ் நிறுவனத்தின் வேணு சீனிவாசன் உள்ளிட்டோரின் பெயர்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டன.
2022-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு இறுதி அறிக்கை தாக்கல் செய்தது. இதனிடையே, தமக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி வேணு சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
2024-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி அவரது மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், அவருக்கு எதிரான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ரங்கராஜன் நரசிம்மன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் அக்டோபர் 14-ந் தேதி நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பிரசாந்தோ சந்திரா ஆஜராகி வாதிட்டார்.
2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி கபாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தக் கும்பாபிஷேகத்துக்கு முன்பாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் ஒரு தீர்மானத்தை தமிழக அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். கும்பாபிஷேகத்துக்கு முன்பே மயில் சிலை மாற்றப்பட்டிருந்ததை அந்தத் தீர்மானம் காட்டுவதாக அவர் வாதிட்டார்.
மேலும், அலகில் மலரை வைத்திருக்கும் மயில் சிலை கோவிலில் இருந்ததே இல்லை என்ற வாதத்தையும் தமிழக அரசு மறுத்தது. பழமையான மயில் சிலை ஏற்கெனவே கோவிலில் இருந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை குறித்து கேள்வி
இந்த விசாரணையின்போது நீதிபதி அரவிந்த் குமார், இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக நடைமுறை தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார்.
அப்போது நீதிபதி அரவிந்த் குமார், “தமிழகத்தில் இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதத்தின் வழிபாட்டுத் தல்களுக்குள்ளும் அரசு நியமித்த அதிகாரிகள் அமர்ந்து, அங்குள்ள சொத்துகளைக் கணக்கெடுக்கிறார்கள்? கிறிஸ்தவம், சமணம், பவுத்தம், இஸ்லாம் அல்லது வேறு எந்த மதத்திலாவது இப்படிப்பட்ட நடைமுறை இருக்கிறதா?” என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்த தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பிரசாந்தோ சந்திரா, “வக்ஃப் சட்டத்தில் அதுபோன்ற விதி இருக்கலாம். முத்தவல்லி என்ற நிர்வாகப் பொறுப்பு உள்ளது” என்றார்.
உடனே நீதிபதி அரவிந்த் குமார், “ஆனால் முத்தவல்லி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் அரசின் பிரதிநிதி அல்ல” என்று சுட்டிக்காட்டினார்.
அப்போது ரங்கராஜன் நரசிம்மன், “வேறு எந்த மதத்திலும் வழிபாட்டுத் தலங்களுக்குள் அரசு அதிகாரிகள் அமர்ந்து நிர்வாகம் செய்வதற்கு இதுபோன்ற சட்டம் இல்லை” என்அறு வாதிட்டார்.
வேணு சீனிவாசன் தரப்பு விளக்கம்
இதனிடையே, மயில் சிலை திருட்டுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று வேணு சீனிவாசன் மறுத்துள்ளார். கோவிலின் அன்றாட நிர்வாகத்துக்குத் தாம் பொறுப்பானவர் அல்ல என்றும், கோவில் திருப்பணிகளுக்காகத் தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.70 லட்சம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 29-ந் தேதி மீண்டும் விசாரணை
இந்த வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 29-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
