ரேஷன் கடைகளில் பாமாயில் பாக்கெட் விநியோகம் செய்ய அறிவிக்கப்பட்ட டெண்டருக்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு பாமாயில் விநியோகம் செய்ய முடிவு செய்து தமிழக அரசு டெண்டர் கோரியது. தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை டெண்டர் அறிவிப்பை கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியிட்டது.
தொடர்ந்து கடந்த செப்டம்பர் 8ம் தேதி டெண்டர் திறக்கப்பட்டு, 4 நிறுவனங்களுக்கு பாமாயில் பாக்கெட் விநியோகம் செய்யும் டெண்டர் ஒதுக்கப்பட்டது.
இதில் முதல் கட்டமாக 200 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகள் வரும் அக்டோபர் 29ஆம் தேதிக்குள் விநியோகம் செய்ய கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் விகிதாச்சார அடிப்படையில் பாமாயில் பாக்கெட்டுகள் பிரிக்கப்படவில்லை என்று கூறி நுகர்வோர் வாணிப கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெண்டர் எடுத்துள்ள கே டிவி ஹெல்த் ஃபுட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதில், ‘200 லட்சம் பாக்கெட்டுகளை முதலில் விநியோகம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எம்ஜிஎம் நிறுவனம், குமார் அக்ரோ, இண்டகிரேட் நிறுவனம், கேடிவி ஹெல்த் ஃபுட் நிறுவனம் ஆகியவை டெண்டர் எடுத்துள்ளன.
இதில் மொத்தமாக 200 லட்சம் பாக்கெட்டுகள் விநியோகம் செய்ய டெண்டர் எடுத்த எம்ஜிஎம் நிறுவனம் முதலில் 80 லட்சம் பாக்கெட்டுகளும்,
210 லட்சம் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய டெண்டர் எடுத்த குமார் அக்ரோ 52 லட்சம் பாக்கெட்டுகளும்,
180 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டிய இன்டகிரேட் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளும்,
360 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டிய எங்கள் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளையும் முதலில் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
சரியான விகிதாச்சார அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
360 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய டெண்டர் எடுத்துள்ள எங்கள் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்றும், எங்களை விட குறைவாக பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டிய எம் ஜி எம் ஆயில் நிறுவனம் 80 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது சரியானது அல்ல. எனவே விகிதாச்சார அடிப்படையில் பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பிடி ஆஷா முன்பு இன்று (அக்டோபர் 15) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி பாமாயில் விநியோகம் தொடர்பாக செப்டம்பர் 29ஆம் தேதி நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
