ஹலோ.. யாருங்க நீங்க? இனி கேட்கவே வேண்டாம்.. போன் அடித்தாலே பெயர் தெரியும்.. நவ. 1 முதல் மத்திய அரசு அதிரடி!

Published On:

| By Mathi

Name Display-Mobile

நமது செல்போனில் Save செய்யாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், யார் பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாமல் குழம்பியிருப்போம். சில நேரங்களில் தெரியாத எண்ணில் இருந்து வரும் இத்தகைய கால்களை எடுக்கலாமா, வேண்டாமா என்ற சந்தேகமும் வரும். இனி இந்த பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போகிறது.

நவம்பர் 1-ந் தேதி முதல் செல்போனில் அழைப்பவரின் எண்ணுடன் அவரது பெயரையும் காட்டும் புதிய வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

என்ன புதிய வசதி?

பொதுவாக நமது செல்போனில் ஒருவரது எண்ணைச் Save செய்து வைத்திருந்தால், அவர் அழைக்கும்போது அவரது பெயர் திரையில் தெரியும்.

ஆனால் Save செய்யாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் அந்த எண் மட்டுமே தெரியும். யார் அழைக்கிறார்கள் என்பதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியாது.

ADVERTISEMENT

இந்த நிலையை மாற்றுவதற்காக Calling Name Presentation (CNAP) என்ற புதிய சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்தச் சேவையின் மூலம் நமது செல்போனில் Save செய்யாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தாலும், அந்த எண்ணுக்குரிய நபரின் பெயரும் திரையில் தெரியும்.

ADVERTISEMENT

பெயர் எப்படி தெரியும்?

உதாரணமாக, ஒருவர் புதிய சிம் கார்டு வாங்கும்போது தனது பெயர் மற்றும் அடையாள விவரங்களைக் கொடுத்து பதிவு செய்கிறார். அந்த விவரங்கள் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் இருக்கும்.

இப்போது அந்த நபர் வேறொருவருக்குப் போன் செய்தால், அவரது எண்ணுடன் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பெயரும் அழைப்பைப் பெறுபவரின் செல்போன் திரையில் காட்டப்படும்.

அதாவது, நமது செல்போனில் அந்த எண்ணை Save செய்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

Truecaller தேவையில்லையா?

தற்போது தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், யார் அழைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள பலரும் Truecaller போன்ற செயலிகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் புதிய CNAP சேவையில் தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ள பெயரே நேரடியாகக் காட்டப்படும்.

இதற்காகத் தனியாக ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை.

அதேநேரத்தில் இந்த வசதி அறிமுகமானதும் Truecaller போன்ற செயலிகள் முற்றிலும் தேவையில்லாமல் போய்விடும் என்று கூற முடியாது. ஏனெனில் அவை ஸ்பேம் அழைப்புகளைக் கண்டறிவது உள்ளிட்ட கூடுதல் வசதிகளையும் வழங்குகின்றன.

வெளிநாட்டில் இருந்து அழைப்பு வந்தால்?

வெளிநாடுகளில் இருந்து நமக்குத் தெரியாத எண்ணில் அழைப்பு வந்தால், அது வெளிநாட்டு அழைப்பு என்பதை எளிதாக அறிந்துகொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதன்படி, செல்போனில் Save செய்யப்படாத வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், திரையில் ‘International Call’ என்று காட்டப்படும்.

இதனால் வெளிநாட்டில் இருந்து அழைப்பு வருகிறது என்பதை அழைப்பை எடுப்பதற்கு முன்பே தெரிந்துகொள்ள முடியும்.

தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா?

இந்தப் புதிய வசதியைப் பெறுவதற்காக வாடிக்கையாளர்கள் தொலைத்தொடர்பு நிறுவன அலுவலகத்துக்குச் செல்ல வேண்டியதில்லை. தனியாக விண்ணப்பிக்கவோ, புதிய செயலியைப் பதிவிறக்கம் செய்யவோ தேவையில்லை.

தொலைத்தொடர்பு நிறுவனங்களே இந்தச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நவம்பர் 1 முதல் அமல்

நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு சேவைப் பகுதிகளிலும் நவம்பர் 1-ந் தேதி முதல் CNAP வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த வசதியின் மூலம் தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளையும் அடையாளம் காண்பது எளிதாகும். அதேநேரத்தில் செல்போனில் பெயர் தெரிகிறது என்பதற்காக மட்டும் அழைப்பவர் நம்பகமானவர் என்று முடிவு செய்துவிடக் கூடாது. வங்கி விவரங்கள், ஓடிபி (OTP), பாஸ்வேர்டு போன்றவற்றை யாரிடமும் பகிரக் கூடாது.

4G, 5G போன்களுக்கு மட்டும்தானா?

நவம்பர் 1-ந் தேதி முதல் 4G, 5G மற்றும் அதற்கு மேற்பட்ட நெட்வொர்க்குகளில் இந்தப் புதிய வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

2G, 3G நெட்வொர்க்குகள் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசிகளில் இந்த வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

கம்பெனிகள் போன் செய்தால் பெயர் தெரியுமா?

ஒரு கம்பெனி தனது வாடிக்கையாளர்களுக்குப் போன் செய்தால், அந்த கம்பெனியின் பெயரையும் திரையில் காட்டுவதற்கான வசதி உள்ளது.

இதற்கு அந்த கம்பெனியின் பெயர் வர்த்தக முத்திரையாக (Trademark) பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஜிஎஸ்டி பதிவில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனம் இந்த விவரங்களைச் சரிபார்த்த பிறகு, கம்பெனியின் பெயரைக் காட்ட அனுமதி வழங்கலாம்.

போனில் Save செய்த பெயர் மாறிவிடுமா?

நமது செல்போனில் ஏற்கெனவே Save செய்து வைத்துள்ள பெயர் மாறாது. உதாரணமாக, ஒருவரின் எண்ணை ‘அண்ணன்’ என்று Save செய்திருந்தால், அவர் போன் செய்யும்போது ‘அண்ணன்’ என்ற பெயர்தான் தெரியும்.

அந்த எண்ணை Save செய்யாமல் இருந்தால் மட்டுமே தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பெயர் காட்டப்படும்.

தவறான பெயர் தெரிந்தால் என்ன செய்வது?

செல்போனில் அழைப்பவரின் பெயர் தவறாகக் காட்டப்பட்டாலோ, இந்த சேவையில் வேறு பிரச்சினைகள் ஏற்பட்டாலோ சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் புகார் அளிக்கலாம்.

இதற்காக வாடிக்கையாளர்களின் புகார்களைப் பெறவும், அவற்றுக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு வழங்கவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எல்லோருடைய பெயரும் தெரியுமா?

அனைவருடைய பெயரும் திரையில் காட்டப்படும் என்று கூற முடியாது.
தொலைத்தொடர்புத் துறையின் விதிகளின்படி, அழைப்பவரின் அடையாளத்தை மறைக்கும் சிறப்பு வசதியைப் பெற்றுள்ளவர்களின் பெயர் காட்டப்படாது.

மேலும், அழைப்பு முடிந்த பிறகு CNAP சேவைக்காகப் பெறப்பட்ட பெயர் விவரங்களைத் தொடர்ந்து Save செய்து வைக்காத வகையில் தொழில்நுட்ப ஏற்பாடுகளைச் செய்யவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பு துறையின் அறிக்கை- முழுமையாக

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share