தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) முடிவடைந்த நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை (SSR) மேற்கொள்வதற்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்டோபர் 15-ந் தேதி) அறிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் இன்று அக்டோபர் 15-ந் தேதி வெளியிட்ட அறிக்கை: வாக்காளர் பட்டியலில் விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்காக செப்டம்பர் 29-ந் தேதி சிறப்பு முகாம்களை நடத்த அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2027-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2027-ம் ஆண்டு ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயதை எட்டும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 15 மாநிலங்களிலும், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 2 யூனியன் பிரதேசங்களிலும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
முக்கிய தேதிகள் என்ன?
நவம்பர் 12-ந் தேதி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
நவம்பர் 12 முதல் டிசம்பர் 11-ந் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வது மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.
டிசம்பர் 28-ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
2027 ஜனவரி 4-ந் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ, ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, டெல்லி, ஒடிசா, சிக்கிம், திரிபுரா, தெலங்கானா ஆகிய பகுதிகளில் SIR பணிகள் நடைபெற்று வருவதாலோ அல்லது அண்மையில் முடிவடைந்துள்ளதாலோ, அங்கு SSR பணிகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.
இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய 3 பகுதிகளில் இதுவரை SIR பணிகள் தொடங்கப்படவில்லை. அங்குள்ள வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதனிடையே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்துடன், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைப்படி தமிழகத்தில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் அக்டோபர் 27, 2025 முதல் பிப்ரவரி 23, 2026 வரை 4 மாதங்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பணியில் 75,032 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 38 மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.
மேலும் 2,877 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 6 தேசியக் கட்சிகள் மற்றும் 6 மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த 2.77 லட்சம் வாக்குச்சாவடி நிலை முகவர்களும் பங்கேற்றனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா?
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள், பெயரைச் சேர்ப்பதற்காக படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் உள்ள ஒருவரின் பெயரை நீக்கக் கோருவதற்கு படிவம் 7-ஐ சமர்ப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் குடியிருப்பை மாற்றுவது, பதிவுகளைத் திருத்துவது, மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு படிவம் 8-ஐ சமர்ப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை https://voters.eci.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தாலோ, உதவி தேவைப்பட்டாலோ 1950 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம்.
தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில், தமிழகத்தின் அனைத்து வாக்குச்சாவடி பகுதிகளிலும் அக்டோபர் 7 முதல் 10-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
