ஜிஎஸ்டி முறையில் சரக்கு வாகனங்களை சோதனையிடும் வழிமுறைகளில் வணிகவரித்துறை முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
தமிழக அரசின் வணிகவரித்துறையால் சாலைகளில் செல்லும் சரக்கு வாகனங்களை சோதனை செய்ய ரோவிங் ஸ்குவாட் செயல்பட்டு வந்தது.
வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் பொருட்களுக்கு உரிய ரசீது மற்றும் இன்வாய்ஸ் இருக்கிறதா என்பதை சரி பார்ப்பது இவர்களின் முக்கிய பணியாகும்.
இந்த சூழலில் ரோவிங் ஸ்குவாடுகள் பொதுவான அல்லது தோராயமான வாகன சோதனைகளில் ஈடுபட கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது உளவுத்துறை தகவல் இருந்தால் மட்டுமே சரக்கு வாகனங்களை மறித்து சோதனையிட வேண்டும் என்று வணிகவரி ஆணையர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 8ம் தேதி நடைபெற்ற 57 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், வணிகர்களுக்கு தேவையில்லாத அலைச்சலையும் சோதனைகளையும் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இந்த உத்தரவின்படி, இதுவரை தன்னிச்சையாக சென்று வாகனங்களை சோதனையிட்டு வந்த ரோவிங் ஸ்குவாட் அமைப்பு இனி பறக்கும் படை என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த அதிகாரிகள் இனி தங்கள் விருப்பம்போல் வாகனங்களை மறித்து சோதனை இடக்கூடாது.
ஜிஎஸ்டி சட்ட விதிகளுக்கு புறம்பாக பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக தகுந்த ஆதாரங்கள் மற்றும் சுற்றறிக்கை விவரங்கள் கிடைக்கும் போது மட்டுமே பறக்கும் படைகள் களத்தில் இறங்கி சோதனை இட வேண்டும்.
சோதனை இடுவதற்கான காரணங்கள் மின்னணு வடிவில் பதிவு செய்து இணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியின் எழுத்துப்பூர்வமான ஒப்புதலை பெற்ற பிறகு, சோதனையை தொடங்க வேண்டும்.
பறக்கும் படை அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் இணை ஆணையர் அலுவலகத்திலேயே இருக்க வேண்டும். குறிப்பிடத்தக்க தகவல் மற்றும் உத்தரவு வரும்போது மட்டுமே சோதனை களத்திற்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
