பழனி, ஈரோடு, திருவாரூர், நாகை, ஜோலார்பேட்டை, மதுரை, ராமேஸ்வரம்.. ஆயுத பூஜைக்கு அடுத்தடுத்து சிறப்பு ரயில்கள்.. இன்று காலை 8 மணிக்கு புக்கிங்!

Published On:

| By Mathi

Pooja Festival-Train

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னை எழும்பூர்–காரைக்குடி, காரைக்குடி–தாம்பரம், சென்னை எழும்பூர்–மங்களூரு, மங்களூரு–ராமேஸ்வரம் ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (அக்டோபர் 17-ந் தேதி) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வழக்கமான ரயில்களில் டிக்கெட் கிடைக்காததால் பலரும் சிறப்பு ரயில்கள் அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், பயணிகளுக்காக 4 சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை டூ காரைக்குடி

சென்னை எழும்பூரில் இருந்து நாளை மறுநாள் அக்டோபர் 18-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு சிறப்பு ரயில் (06037) புறப்படுகிறது. இந்த ரயில் அதே நாள் காலை 11.45 மணிக்குக் காரைக்குடியைச் சென்றடையும்.

ADVERTISEMENT

தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருநள்ளாறு, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாகச் செல்கிறது.

காரைக்குடி டூ தாம்பரம்

விடுமுறை முடிந்து சென்னைக்குத் திரும்புகிறவர்களுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அக்டோபர் 20-ந் தேதி காரைக்குடியில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு சிறப்பு ரயில் (06038) புறப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் புதன்கிழமை காலை 8 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.

ADVERTISEMENT

அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த 2 ரயில்களிலும் தலா 4 படுக்கை வசதிப் பெட்டிகள், 11 பொதுப்பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியுடன் 2 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இடம்பெறுகின்றன.

சென்னை டூ மங்களூரு

சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் பயணிகளுக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 17-ந் தேதி சனிக்கிழமை இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் (06036) புறப்படுகிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் சென்றடையும்.

பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, ஷோரனூர், கோழிக்கோடு, கண்ணூர் வழியாக இயக்கப்படுகிறது.

மங்களூரு டூ ராமேஸ்வரம்

மங்களூருவில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அக்டோபர் 19-ந் தேதி திங்கட்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06142), அதே நாள் இரவு 7.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.

இந்த 2 மங்களூரு வழித்தடச் சிறப்பு ரயில்களிலும் முதல் வகுப்பு ஏசி, இரண்டடுக்கு ஏசி, மூன்றடுக்கு ஏசி, படுக்கை வசதி மற்றும் பொதுப்பெட்டிகள் இடம்பெறுகின்றன.

இன்று காலை 8 மணிக்கு புக்கிங்

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் இன்று (அக்டோபர் 17-ந் தேதி) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

ஆகவே, ஆயுத பூஜைக்கு ஊருக்குச் செல்லத் திட்டமிட்டிருப்பவர்கள், தங்களுக்கான ரயில் எண், புறப்படும் தேதி, நேரத்தைச் சரிபார்த்து டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share