தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அக்டோபர் 22-ந் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 16-ந் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடையில் அதிகபட்சமாக 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருத்துவபுரத்தில் 16 செ.மீ. மழையும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி, பொதுப்பணித்துறை மக்கினாம்பட்டி மற்றும் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தலா 15 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழை?
தமிழகப் பகுதிகளின் மேல் சுமார் 3.1 முதல் 4.5 கிலோ மீட்டர் உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது. அங்கிருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நீடிக்கிறது.
இதன் காரணமாக இன்று (அக்டோபர் 16-ந் தேதி) திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை 6 மாவட்டங்களில் மிக கனமழை
நாளை (அக்டோபர் 17-ந் தேதி) நீலகிரி, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சி, நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 18, 19-ந் தேதிகளில் மழை எப்படி இருக்கும்?
அக்டோபர் 18-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கோவை, ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 19-ந் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை
அக்டோபர் 20-ந் தேதி நீலகிரி, கோவை, திருவள்ளூர், சென்னை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பூர், மதுரை, ஈரோடு, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், திருவாரூர், தஞ்சாவூர், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 21, 22-ந் தேதிகளில் மழை எங்கே?
அக்டோபர் 21-ந் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் ஆகிய 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 22-ந் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்றும் நாளையும் மழை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.
நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.
அக்டோபர் 16 முதல் 22-ந் தேதி வரை மழை பெய்யும் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்களுக்குத் தனியாக எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
