தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஒரு பக்கம் கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகப் பதிவாகியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 16-ந் தேதி) மாலை 5.30 மணிக்கு வெளியிட்ட வெப்பநிலை விவரங்களின்படி, திருச்சி விமான நிலையத்தில் அதிகபட்சமாக 35.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 2.6 டிகிரி அதிகம்.
கன்னியாகுமரியில் 33.1 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 2.4 டிகிரி அதிகமாகும். நாகப்பட்டினத்தில் 34 டிகிரி, மதுரை விமான நிலையத்தில் 35 டிகிரி, ஈரோட்டில் 34 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் 33.3 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 32.8 டிகிரியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதனிடையே நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
ஒரு பக்கம் மிக கனமழை எச்சரிக்கை, இன்னொரு பக்கம் இயல்பைவிட அதிகமான வெப்பநிலை என தமிழகத்தில் மாறுபட்ட வானிலை நிலவுகிறது.
