சென்னையில் இன்று (அக்டோபர் 17-ந் தேதி) மாலை வடசென்னை பகுதிகளில் மேகவெடிப்பு போல கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரு மணி நேரத்திற்குள் சில பகுதிகளில் சுமார் 7 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.
சென்னையில் இன்று மாலை முதல் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடசென்னையின் திருவொற்றியூர், ராயபுரம், தண்டையார்பேட்டை, எண்ணூர், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. குறுகிய நேரத்தில் அதிக அளவில் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலான ஒரு மணி நேரத்தில் தண்டையார்பேட்டையில் 7.3 செ.மீ., திருவொற்றியூரில் 6.9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேகவெடிப்புக்கான அளவான 10 செ.மீ. மழையை எட்டாவிட்டாலும், வடசென்னையில் ஒரு மணி நேரத்திற்குள் 7 செ.மீ.க்கும் அதிகமான மழை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
