தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 17-ந் தேதி) எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பில்,
- திண்டுக்கல்
- மதுரை
- நாகப்பட்டினம்
- புதுக்கோட்டை
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தேனி
- திருவள்ளூர்
- திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் இன்று இரவு 9.30 மணி வரை இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மணிக்கு 5 முதல் 15 மி.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பதிக்கு ரெட் அலர்ட்
ஆந்திர மாநிலத்தின் நெல்லூர், திருப்பதி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், மணிக்கு 15 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் கேரளாவின் இடுக்கி, பாலக்காடு, சத்தீஸ்கரின் சுக்மா, ஒடிசாவின் கோராபுட் ஆகிய மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இடி, மின்னலின்போது பொதுமக்கள் மரங்களுக்கு அடியிலும் உறுதியற்ற கட்டிடங்களிலும் தஞ்சமடைய வேண்டாம். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு வெளியிட்ட புதிய அறிவிப்பில், சென்னை, செங்கல்பட்டு, திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் அவ்வப்போது கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், சாலைகள் வழுக்கலாகவும், போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
