தீபாவளி கொண்டாட்டத்தில் தமிழகத்தில் அடுத்தடுத்து 15 கொலைகள்- முழு விவரம்!

By Mathi

|

Published on 10 Nov 2026, 9:50 AM

Diwali Murders-Tamil Nadu

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் நடந்த கொலைச் சம்பவங்களில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், 17 வயது சிறுவர்கள் இருவர், பெண்கள் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளி கொண்டாடப்பட்ட நவ. 8-ந் தேதி முதல் நவ. 10-ந் தேதி வரை நிகழ்ந்த கொலைச் சம்பவங்களின் விவரங்கள் வருமாறு:

ADVERTISEMENT

தேனி: காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை

ADVERTISEMENT

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய செந்தில்குமார் (57), தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் மாற்றுப் பணியில் இருந்தார். தீபாவளியன்று இரவு பணியை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றபோது, சமதர்மபுரம் பிரதான சாலையில் இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய அவர்களைச் செந்தில்குமார் கண்டித்தார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த செந்தில்குமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த வழக்கில் மகேஸ்வரன் (22), சூரியமூர்த்தி (24), தீபன்ராஜ் (20), பரத்பிரனேஷ் (21), ஆகாஷ் (23), கவுதம் (22) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ADVERTISEMENT

திருச்சி: 17 வயது சிறுவர்கள் 2 பேர் வெட்டிக் கொலை

திருச்சி மாவட்டம் இனாம் சமயபுரத்தைச் சேர்ந்த விஷால் (17), அவரது உறவினர் ராகுல் (17) ஆகிய இருவரும் புள்ளம்பாடி வாய்க்கால் அருகே ஆயுதங்களுடன் வந்த கும்பலால் தாக்கப்பட்டனர்.

பெற்றோரை இழந்த ராகுல் தனது உறவினர் வீட்டில் தங்கிக் கூலி வேலை செய்து வந்தார். விஷாலும் கூலி வேலை செய்து வந்தார். இந்தத் தாக்குதலில் விஷால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராகுலும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் நிலையில் உயிரிழந்தார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி: பட்டாசு தகராறில் ஐ.டி. ஊழியர் கொலை

திருச்சி மாவட்டம் புறத்தாக்குடியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (20), சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தீபாவளிக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் நண்பர்களுடன் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தபோது டொனால்ட், எடிசன் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது.

இந்தத் தகராறில் டொனால்ட், டெஸ்டர் ஸ்க்ரூடிரைவரால் கிறிஸ்டோபரின் மார்பில் குத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்டோபர் உயிரிழந்தார். தகராறைத் தடுக்க முயன்ற ரஞ்சித் (26) என்பவரும் காயமடைந்தார்.

பெரம்பலூர்: பட்டாசு தகராறில் தொழிலாளி கொலை

பெரம்பலூர் மாவட்டம் நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரவி (50), தீபாவளியன்று இரவு அங்குள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் (35) உள்ளிட்டோர் பட்டாசு வெடித்ததாகவும், அவர்களை ரவி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ரவியின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கியதாக அருள்ராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ரவி உயிரிழந்தார். இந்த வழக்கில் அருள்ராஜ் கைது செய்யப்பட்டார்.

கடலூர்: மதுபோதையில் தகராறு.. பீர் பாட்டிலால் குத்திக் கொலை

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிருத்விராஜன் (26), அருளரசன் (29) என்பவருடன் மது அருந்தியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அருளரசன் தனது சகோதரர் அன்பரசனுடன் வந்து பிருத்விராஜனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பீர் பாட்டில் மற்றும் கத்தியால் குத்தப்பட்ட பிருத்விராஜன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் அருளரசனைப் பிடிக்க முயன்றபோது அவர் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாகவும், இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி: சொத்துத் தகராறில் முதியவர் கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (70) என்பவருக்கும் அவரது சகோதரர் சக்திவேலுக்கும் இடையே சொத்துப் பிரச்சினை இருந்து வந்தது. தீபாவளியன்று நின்னையூர் பாலம் அருகே பாலசுப்பிரமணியனுக்கும் சக்திவேலின் மகன் தணிகைவேலுக்கும் (35) இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது தணிகைவேல் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த பாலசுப்பிரமணியனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர் உயிரிழந்தார். தியாகதுருகம் போலீசார் தணிகைவேலைக் கைது செய்தனர்.

அண்ணனைத் தாக்கியதைத் தட்டிக்கேட்ட தம்பி கொலை

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தனுஷ் (19), தனது அண்ணன் சிலம்பரசனுடன் ஏற்பட்ட தகராறு குறித்து நியாயம் கேட்கச் சென்றார்.

அப்போது அப்புக்குட்டி என்பவர், அவரது தந்தை மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து தனுஷைத் தாக்கி அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த தனுஷ் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்தக் கொலை தொடர்பாக எம்.கே.பி. நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை: திருவொற்றியூரில் பவித்திரன் வெட்டிக் கொலை

சென்னை திருவொற்றியூரில் நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் பவித்திரன் (32) என்பவர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலை தொடர்பாக 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பவித்திரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம்: ரயில் தண்டவாளம் அருகே இளைஞர் சடலம்

காஞ்சிபுரம் மாநகராட்சி 21-வது வார்டு அரியந்த் அவென்யூ அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை மற்றும் கண் பகுதியில் பலத்த காயங்களுடன் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். விசாரணையில் அவர் திருக்காலிமேடு நேதாஜி நகரைச் சேர்ந்த பார்த்திபன் (32) என்பது தெரியவந்தது.

தீபாவளியன்று நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சிவகங்கை: ஜாமீனில் வந்த நவீன் கொலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தெற்குத் தெருவைச் சேர்ந்த தங்கச்சாமி என்ற நவீன் (26), குற்ற வழக்கில் சிறையிலிருந்து அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். தீபாவளியன்று இரவு நண்பர்களுடன் காட்டுப் பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் அவரைத் தாக்கிக் கொலை செய்துவிட்டுத் தப்பியது. இந்த வழக்கில் கல்லல் போலீசார் 7 பேரைக் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை: மானாமதுரை அருகே விக்னேஷ் கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேலூர் முருகபாஞ்சானைச் சேர்ந்த விக்னேஷ் (24), தீபாவளியன்று இரவு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் விக்னேஷை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. அவருடன் இருந்த முனியாண்டி என்பவரும் தாக்குதலில் படுகாயமடைந்தார். இந்தக் கொலை தொடர்பாக சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்: எரியோட்டில் மனைவி கொலை

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அஜீத்குமார் (28), சுவேதா (26) என்பவரைக் காதலித்து ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் நவ. 9-ந் தேதி அதிகாலை சுவேதாவைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இதையடுத்து அஜீத்குமார் எரியோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

விருதுநகர்: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் அருகே வடக்குப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அன்புச்செல்வம் (25), தீபாவளியன்று இரவு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அன்புச்செல்வம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 14 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேரை அருப்புக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்: இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை

திருவள்ளூர் மாவட்டம் சென்றான்பாளையம் அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மேகலா (24) என்ற இளம்பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாகப் பிரசாத் என்பவரைப் பென்னலூர்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel