ஒரே கல்லூரியில் படித்த ஓல்டு ஸ்டுடண்ட்ஸ்.. திமுகதான் சீனியர் பேட்ச்.. சட்டப்பேரவையில் உதயநிதி சொன்ன சுவாரசிய தகவல்- பேச்சு முழுமையாக!

Published On:

| By Pandeeswari Gurusamy

Udhay

தமிழக சட்டமன்றத்தில் இன்று (மே 12) சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அமைச்சர் செங்கோட்டையன் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். இதையடுத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு எம்எல்ஏக்கள் வாழ்த்துரை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் திமுக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “என்னை இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பிய சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், எங்கள் தலைவர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகளைத் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

அதேபோல், எங்கள் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்காக உழைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கும், தோழமை இயக்கத் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அவையில் எனக்கு உடன் இருந்து வழிகாட்டக்கூடிய எதிர்கட்சித் துணைத் தலைவர் கே.என். நேரு, திமுக கொறடா வேலு, துணை கொறடா கோவி செழியன், செயலாளர் தங்கம் தென்னரசு, பொருளாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோருக்கும், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்றத்தில் நேற்று நாம் அனைவரும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டோம். அதன் பின்னர், இன்று முதல் நடவடிக்கையாகப் பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சட்டப்பேரவையில் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவைத் தலைவருக்கும், துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவிசங்கருக்கும், எங்கள் தலைவர் சார்பாகவும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

பேரவைத்தலைவர் சிரித்த முகத்திற்கு சொந்தக்காரர். எல்லோரிடத்திலும் மிகுந்த அன்போடு பழகக்கூடியவர் என்று பலரும் சொல்ல நான் கேள்விப்பட்டுள்ளேன். இதே சட்டப்பேரவையில் 1980ஆம் ஆண்டுத் தேர்தலிலும் 2011 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று சிறந்த சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருக்கிறீர்கள். பேரவையின் மரபுகளும் விதிகளும் உங்களுக்கு புதிதல்ல. நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு சேர்த்து மூன்றாவது முறையாக ஆளும் கட்சி உறுப்பினராகச் சட்டமன்றத்திற்குள் வந்துள்ளீர்கள்.

இந்த முறை எதிர்க்கட்சிகளையும் அரவணைத்துச் செயல்படுகின்ற ஒரு பேரவைத் தலைவராக நீங்கள் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அந்தப் பொறுப்பில் சிறப்பாகவும் நடுநிலையோடும் செயல்படுவீர்கள் என்பதுதான் எங்கள் அனைவரின் எதிர்பார்ப்பு. அதேபோல், எளிய பின்னணியில் இருந்து வந்து முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றிருக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு ரவி சங்கர் பேரவையின் துணைத் தலைவராக உங்களுக்கு உறுதுணையாக இருந்து இந்த அவையை வழிநடத்துவார் என நாங்கள் அனைவரும் நம்புகிறோம்.

ADVERTISEMENT

திமுகவின் விருப்பம்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் நேற்று எங்கள் தலைவர் வீடுகளுக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கும் சென்று வாழ்த்துக்களைப் பெற்றுவிட்டுச் சென்றார். அந்த அரசியல் நாகரீகம் இந்தப் பேரவையிலும் தொடர வேண்டும் என்பது எங்களது எண்ணமும் எதிர்பார்ப்பும் ஆகும். திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக மட்டும் இல்லாமல், ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக நிச்சயம் செயல்படும். எங்கள் தலைவர் சொன்னது போல், திராவிட முன்னேற்றக் கழகம் என்றுமே ஒரு ஆக்க சக்திதான்.

மாண்புமிகு பேரவைத் தலைவரே, இந்தப் பேரவைக்கு ஒரு வரலாறு உள்ளது. இன்று இந்தியாவில் பண்பாட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழ்நாடு சிறப்பாக முன்னேறியிருக்கிறது என்றால், இப் பேரவைகளில் நடந்த விவாதங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள், இயற்றப்பட்ட சட்டங்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தான் காரணம். பிற மாநிலங்களுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டியாகவும் இருந்த சட்டமன்றப் பேரவை இந்தத் தமிழக சட்டப்பேரவை. அப்படிப்பட்ட இந்தப் பேரவையில் ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு இடம் கொடுத்து, ஜனநாயக மாண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பேரவைத் தலைவர் என்றைக்கும் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்.

நாம் இங்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று எதிரெதிர் வரிசையில் இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சியில் நாம் அனைவரும் ஒரே வரிசையில் முன்வரிசையில் நின்று உழைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதைத்தான் தமிழக மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் அதைத்தான் விரும்புகிறது. எங்கள் தலைவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் அடிக்கடி சொல்லும் வார்த்தை “இது கழக அரசு அல்ல, நமது அரசு” என்பதுதான். அதை நிரூபித்தும் காட்டியுள்ளார். சென்ற திராவிட மாடல் அரசு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களுக்குமான அரசாகவே செயல்பட்டு வந்தது. ஆகவே, இந்தப் புதிய அரசும் அனைவருக்குமான அரசாக, உங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்குமான அரசாகச் செயல்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.

திமுக தான் சீனியர் பேட்ச்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நானும் ஒரே கல்லூரியில் படித்த ஓல்ட் ஸ்டுடண்ட்ஸ். ஒரே கல்லூரியில் நாம் படித்திருந்தாலும், அரசாங்கத்தை நடத்துவதில் திமுக தான் சீனியர் பேட்ச். 1967 லிலேயே ஆட்சிக்கு வந்தது திமுகதான். நாங்கள்தான் சீனியர்ஸ். அந்த அடிப்படையில் எங்களது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள நீங்களும் தயாராக இருங்கள். நமக்கு எப்போதும் தமிழகத்தின் நலன்தான் மிக முக்கியம். பேரவைத் தலைவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரான நானும் அவை முன்னவரும் உங்கள் கையைப் பிடித்து அழைத்து வந்து இந்த இருக்கையில் அமர வைத்துள்ளோம்.

இனி இந்த இரண்டு தரப்பையும் நீங்கள்தான் கையைப் பிடித்து அரவணைத்து, கோபப்படாமல் வழிநடத்த வேண்டும். நீங்கள் கோபப்பட மாட்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். உங்களைக் கோபப்படுத்தும் வகையில் நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம். சட்டமன்ற ஜனநாயகத்தில் ஆளும் கட்சி கால்களாகவும் எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும். அதில்தான் இந்த அவையின் பெருமை அடங்கியுள்ளது. இந்த முறை கிட்டத்தட்ட ஆளும் கட்சிக்கு நிகரான எதிர்க்கட்சி வரிசை வலிமையாக அமைந்துள்ளது. அதுதான் இந்தப் பேரவையின் கூடுதல் சிறப்பு.

தமிழக மக்கள் ஒரு முக்கியமான செய்தியை நமக்குச் சொல்லியுள்ளனர். எதிர்க்கட்சி வரிசை மிக மிக வலிமையாக இருந்து இந்தப் புதிய அரசை வழிநடத்த வேண்டும், ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்று மக்கள் நமக்குச் சொல்லியுள்ளனர். ஆக, மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் எங்களது பணிகள் நிச்சயம் இருக்கும். இந்த அரசு பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

அந்தத் தவறு மீண்டும் வேண்டாம்

இது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகப் பெரிய கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதை எதிர்க்கட்சிகள் எல்லோரும் விமர்சித்துள்ளோம். அதற்கு ஆளும் கட்சியும் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறது. எங்களது கருத்து என்னவென்றால், பாஜக ஆட்சிக்கு வந்திருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் பதவியேற்பு நிகழ்ச்சியின் போது ‘வந்தே மாதரம்’ பாடப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அது பாடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் யார் ஆளுநராக அமர்ந்துள்ளனர் என்பது நமக்கெல்லாம் தெரியும். அவர் இங்கு ஆளுநராக இருந்தபோது தமிழகச் சட்டமன்றப் பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னர் தேசிய கீதம் பாட வேண்டும் எனப் பேரவையின் உடைய மரபையே மாற்றச் சொன்னவர் தான் இன்று மேற்கு வங்கத்தில் ஆளுநராக உள்ளார். அதை எங்கள் தலைவரும் அப்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் உறுதியாக மறுத்தார். ஆகவே, அடுத்து விரைவிலேயே இந்தப் பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார். ஏற்கனவே உங்கள் அரசின் பதவியேற்பு விழாவில் நடந்த அந்தத் தவறு மீண்டும் இந்தப் பேரவையில் நடப்பதற்கு நீங்கள் அனுமதிக்கக் கூடாது. நாங்களும் அனுமதிக்க மாட்டோம். பேரவையில் மட்டுமல்ல, தமிழகத்தில் நடக்கும் எந்த அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்து என்றைக்கும் இரண்டாவது இடத்திற்குத் தள்ளிப் போக விடக்கூடாது. இந்த அரசு அதை அனுமதிக்கக் கூடாது என இங்கு கேட்டுக் கொள்கிறேன்.

எல்லோருக்கும் எல்லாம்

வண்டிக்கு பிரேக் எப்படியோ, காளைக்கு மூக்கணாங்கயிறு எப்படியோ, அப்படித்தான் ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சி என்று பேரறிஞர் அண்ணா சொல்லியுள்ளார். பேரறிஞர் அண்ணா சொன்ன வகையில் ஆளும் கட்சியின் செயல்பாட்டை கூர்ந்து நோக்கி, உங்களது நிறைகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டுகின்ற ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக நாங்கள் நிச்சயம் செயல்படுவோம். இந்த அவைக்குப் புதிதாக நிறைய எம்எல்ஏக்கள் வந்துள்ளீர்கள். அதில் மிகவும் மகிழ்ச்சி. அதேபோல், அதிக ஆண்டுகளுக்குப் பின் நிறைய பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கு இடம் பெற்றுள்ளனர். அதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. அத்தனை பேருக்கும் எங்களது வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் வளர்ச்சிக்காகவும் நாம் அனைவரும் சேர்ந்து இணைந்து பயணிப்போம். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைப்படி “எல்லோருக்கும் எல்லாம்” என்பதை உறுதி செய்யும் வகையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து நாங்கள் நிச்சயம் செயல்படுவோம்.

நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை ஆளும் கட்சிக்கு மக்கள் வழங்காவிட்டாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தேர்தலைச் சந்தித்து வென்ற தோழமை இயக்க சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கும் புதிய அரசிற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவருக்கும், பேரவைத் துணைத் தலைவருக்கும் எனது நன்றி. உங்களது பணிகள் சிறக்கட்டும்.” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share