அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கையா? ஷாக் கொடுக்கும் அன்பில் மகேஷ்

Published On:

| By Pandeeswari Gurusamy

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் கட்டாயப்படுத்தி பணம் பெறப்பட்டதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று (ஆகஸ்ட் 24) பேரவையில் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதற்கு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. பேரவையில் இன்று பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டினார். “கடந்த திமுக ஆட்சியில் சில இடங்களில் கட்டாயப்படுத்தி பணம் வாங்கினார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இதற்கு ஆதாரம் கேட்கிறார்கள், நானே அதற்கு நேரடி சாட்சி. இதைச் சொல்லக்கூடாது என்றுதான் நினைத்தேன், ஆனால் வேறு வழியில்லாமல் கூறுகிறேன். எந்த இடத்தில், எந்த நேரத்தில், எவ்வளவு பணம் வாங்கப்பட்டது, சிறுபான்மை நிறுவனங்களிடம் எவ்வளவு பெறப்பட்டது என்பது வரை என்னால் துல்லியமாகச் சொல்ல முடியும். சென்னை தியாகராய நகரில் வைத்து யார் மூலமாக பணம் பெற்றார்கள் என்பதை பற்றி என்னால் சொல்ல முடியும். இது பற்றி என்மீது என்ன வழக்கு போட்டாலும், அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன்.” எனக் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மறுப்பு

நிதியமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், “ஒரு அமைச்சராகப் பொறுப்பு வகித்துக்கொண்டு நானே லஞ்சம் கொடுத்தேன் என்று கூறுவது முற்றிலும் தவறானது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புகூட என் மீது இதேபோன்றதொரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதற்காக ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். பொய்க் குற்றச்சாட்டுகளைப் பரப்பியவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் இவர் பேசுகிறாரா எனத் தெரியவில்லை.

தான் லஞ்சம் கொடுத்ததாகக் கூறும் அமைச்சர் மீதுதான் முதலில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும். இது குறித்து நிச்சயமாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் புகார் அளிப்போம். உடனடியாக அந்த அமைச்சரை அழைத்து விசாரணை நடத்த வேண்டும். ‘அன்புமொழி, கருணைமொழி’ மட்டுமே தெரியும் என்று பேசியவர் என் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார். அரசு செய்யும் தவறுகளை மறைக்கவே இதுபோன்ற மடைமாற்ற அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்” எனக் கூறினார்.

ADVERTISEMENT

இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share