மதுரையை சேர்ந்த மூதாட்டி சின்னபிள்ளை ‘ஓ ரிங் கருவி’ கண்டுபிடித்ததாகவும் அதனால் அவரது வீட்டுக்கு போய் பிரதமராக இருந்த வாஜ்பாய் காலில் விழுந்ததாகவும் தமிழக சட்டசபையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
தமிழக சட்டசபையில் நேற்று (ஆகஸ்ட் 25) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் கீர்த்தனா தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார்.
அமைச்சர் கீர்த்தனா தமது பேச்சை நிறைவு செய்வதற்கு முன்னதாக (https://www.youtube.com/watch?v=qC6sOdVLN84&t=32871s -ல் 9.03.16 நிமிடம் முதல் 9.03.38 நிமிடம் வரையிலான பேச்சில் தெரிவித்த ஒரு தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் கீர்த்தனா பேச்சு:
“சின்ன பிள்ளைன்னு மதுரை மாவட்டத்தில் ஒருத்தவங்க இருந்தாங்க. அவங்க வந்து ஓரிங் ஹைட்ராலிக் சிஸ்டத்தை வந்து ஆயில் லீக் ஆகாம இருக்கிறதுக்கு (A hydraulic O-ring leak) MSME-ல் இருக்குற ஒரு SGH மதுரையில இருக்கிற பெண்மணி வந்து அதை பண்ணிட்டு இருந்தாங்க. அப்பவே வாஜ்பாய் அவர்கள் அவங்க வீட்டுல போய் அவங்களுடைய காலில் விழுந்து கும்பிட்டு இருந்தாங்க”. இதுதான் அமைச்சர் கீர்த்தனா பேசியிருந்தார்.
மதுரை சின்னபிள்ளையும் ஓ ரிங்கும் உண்மை என்ன?

மதுரை சின்னபிள்ளை
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே கள்ளந்திரி கிராமத்தில் பிறந்தவர். பின்னர் பில்லுச்சேரி கிராமத்தில் வசித்து வந்தார். கிராமப்புற பெண்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தீவிரமாக இயங்கியவர் மதுரை சின்னப்பிள்ளை. களஞ்சியம் தொண்டு நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டவர்.

மத்திய அரசின் விருது
இந்த செயலுக்காக 2000-ம் ஆண்டு மத்திய அரசு, ”ஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார்” விருதை மத்திய அரசு அறிவித்தது. இவ்விருதை 2001-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சின்னபிள்ளைக்கு வழங்கினார்.

விழா மேடையில் காலில் விழுந்த வாஜ்பாய்
அப்போது சின்னப்பிள்ளையின் காலை தொட்டு பிரதமராக இருந்த வாஜ்பாய் வணங்கினார். அந்நாளில் ”பிரதமராக இருந்த வாஜ்பாய் தமிழ்நாட்டு மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கியது” ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருந்தது.
முதல்வராக கலைஞர் பதவி வகித்த போது, ரூ1 லட்சம் பொற்கொழி தந்து சின்னபிள்ளையை பாராட்டினார்.
2018-ம் ஆண்டு வாஜ்பாய் மறைந்த போது, “என் சேவைக்காக என் காலில் விழுந்து வணங்கிய தங்கராசா மறைந்துவிட்டாரே” என வேதனைப்பட்டார் சின்னபிள்ளை.
அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, சின்னபிள்ளை வீட்டுக்கே சென்று அவரது பில்லுச்சேரி கிராமம் போல இந்திய கிராமங்கள் உருவாக வேண்டும் என பாராட்டினார்.

2019-ம் ஆண்டு மதுரை சின்னபிள்ளை மூதாட்டிக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
2024-ல் மதுரை சின்னபிள்ளைக்கு முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கி இருந்தார்.
இத்தகைய வரலாற்றைதான், “சின்ன பிள்ளைன்னு மதுரை மாவட்டத்தில் ஒருத்தவங்க இருந்தாங்க. அவங்க வந்து ஓரிங் ஹைட்ராலிக் சிஸ்டத்தை வந்து ஆயில் லீக் ஆகாம இருக்கிறதுக்கு (A hydraulic O-ring leak) அந்த ஒரு இது வந்து MSME-ல் இருக்குற ஒரு SGH மதுரையில இருக்கிற ஒரு பெண்மணி வந்து அதை வந்து பண்ணிட்டு இருந்தாங்க. அப்பவே வந்து வாஜ்பாய் அவர்கள் அவங்க வீட்டுல போய் அவங்களுடைய காலில் விழுந்து கும்பிட்டு இருந்தாங்க” அமைச்சர் கீர்த்தனா பேசியிருக்கிறார். இந்த வரலாற்றை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் அமைச்சர் கீர்த்தனா விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
