தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 25) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் கீர்த்தனா தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.
அப்போது மதுரையை சேர்ந்த மூதாட்டி சின்னபிள்ளை ‘ஓ ரிங் கருவி’ கண்டுபிடித்ததாகவும் அதனால் அவரது வீட்டுக்கு போய் பிரதமராக இருந்த வாஜ்பாய் காலில் விழுந்ததாகவும் தமிழக சட்டசபையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
இதுகுறித்து முன்னாள் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில் விளக்கம் அளித்துள்ளார். அதில் , “தவறான தகவல் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக இதைப் பகிர்கிறேன்.
மறைந்த முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்கள், சின்னப்பிள்ளை வீட்டுக்கு வரவில்லை. மாறாக டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் தான் வயதில் தன்னைவிட இளையவரான, சின்னப்பிள்ளையின் காலை தொட்டு திரு.வாஜ்பாய் வணங்கினார். இந்நிகழ்வு அன்றைய காலகட்டத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
கிராம மக்களிடையே, ‘களஞ்சியம்’ என்ற பெயரில், மகளிர் சுயஉதவி குழுக்களை உருவாக்கி நடத்தி சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்து பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தியதற்காக, சின்னப்பிள்ளை அவர்களுக்கு ‘ஸ்திரீ சக்தி’ என விருது வழங்கப்பட்டது.”என பதிவிட்டுள்ளார்.
