கை கோர்த்த திமுக- அதிமுக.. ‘சாதித்த’ உதயநிதி, எடப்பாடி.. என்ன நடந்தது? முழு விவரம்

Published On:

| By Mathi

DMK and AIADMK Join Hands in Tamil Nadu Assembly

தமிழக சட்டசபையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் திமுக- அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக திரண்டு சபாநாயகர் ஜேசிடி பிரபாகருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபையில் இன்று காலை (ஆகஸ்ட் 27) சபை நடவடிக்கைகள் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் பின்னர் திடீரென அமைச்சர் ராஜ்மோகனை, “நேபாள துயரம் குறித்து” விவரங்களை தெரிவிக்க சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அழைப்பு விடுத்தார்.

ADVERTISEMENT

இதற்கு திமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பிரச்சனை குறித்து ஏற்கனவே கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்ட நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் முதலிலேயே விளக்கம் தரக் கூடாது; கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்துக் கொண்டு அதன் மீது தாங்கள் கருத்து தெரிவித்த பின்னரே அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் திமுக- அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒருசேர வலியுறுத்தினர்.

ஆனால் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “அமைச்சர் பேசி முடித்ததும் கட்டாயம் உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன்.. கரூர் சம்பவத்தின் போது இதேபோல்தான் முதல்வர் விளக்கம் அளித்தார். அதன் பின்னர் மற்ற உறுப்பினர்கள் பேசினர்” என சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “அன்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கரூர் சம்பவம் பற்றி விளக்கம் அளித்தார்; ஆனால் இன்று முதல்வர் சட்டசபையில் இல்லை” என்றார்.

ADVERTISEMENT

இருப்பினும் இதை ஏற்க மறுத்த திமுக- அதிமுகவினர் தொடர்ந்து சபாநாயகருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. சபை மரபை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மாற்றுவதாகவும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர்.

அப்போது, சபை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன் எழுந்து, “அமைச்சர் ராஜ்மோகன் முதலில் பேசுவதை சபாநாயகர் மறுபரிசீலனை செய்ய” கேட்டுக் கொண்டார். இதேபோல அமைச்சர் ராஜ்மோகனும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய கேட்டுக் கொண்டார்.

ADVERTISEMENT

இதனையடுத்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தை குறிப்பிடுமாறு எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அனுமதி அளித்தார். இதனடிப்படையில் நேபாளத்துக்கு சென்ற தமிழர்கள் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் கருத்துகளை முன்வைத்தனர். பின்னர் அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share