‘மதுரை சின்னப்பிள்ளை..’ அமைச்சர் கீர்த்தனாவின் ”அசர” வைக்கும் விளக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 25) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் கீர்த்தனா தாக்கல் செய்து பேசுகையில், மதுரையை சேர்ந்த மூதாட்டி சின்னபிள்ளை ‘ஓ ரிங் கருவி’ கண்டுபிடித்ததாகவும் அதனால் அவரது வீட்டுக்கு போய் பிரதமராக இருந்த வாஜ்பாய் காலில் விழுந்ததாகவும் தெரிவித்தார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து இன்று 111 விதியின் கீழ் திருத்த அறிக்கையின் மீது பேரவையில் பேசிய தொழில் துறை அமைச்சர் , அன்று நேரம் கருதி கதையை நான் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன்; அதனால் அது இப்போது வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அதற்கு விளக்கம் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு இதைக் கூறுகிறேன்.

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் இயங்கும் ‘தான்’ பவுண்டேஷன் (DHAN Foundation) என்ற சுயஉதவிக் குழு அமைப்பில் ஒரு ஆக்டீவ் உறுப்பினர்தான் சின்னப்பிள்ளை. அப்பன் திருப்பதி பகுதியில் வைகை வட்டார களஞ்சியம் சுய உதவிக் குழு மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அவர் சிறப்பாகப் பணியாற்றி வந்தார். கிராமப் பெண்களிடையே ஒரு சேமிப்புப் பிரிவைத் தொடங்க முயற்சிகளை மேற்கொண்டனர். பெண்களை மேம்படுத்துவதன் மூலம் வறுமையையும் கடன் தொல்லையையும் குறைக்கப் பங்களிப்பு செய்துள்ளார். அவரது சேவையைப் பாராட்டி 2019-ஆம் ஆண்டில் ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது அவரின் செயல்களுக்காக மட்டுமே.

2001ல் ‘ஸ்ரீ சக்தி புரஸ்கார்’ விருது பெற்ற ஐந்து பெண்களில் சின்னப்பிள்ளையும் ஒருவர்.அந்த விருது வழங்கும் விழாவில்தான், அவரது மகத்தான செயலைப் பாராட்டி முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாய் அவர்கள் சின்னப்பிள்ளையின் பாதங்களில் விழுந்து ஆசி பெற்றார். அதுவும் அவரது செயலுக்கான ஒரு அங்கீகாரம்தான்.

ADVERTISEMENT

அதேசமயம், மதுரையில் இயங்கும் ‘ஹைடெக் அராய்’ (Hi-Tech Arai) என்ற ஆட்டோமொபைல் உதிரிபாக நிறுவனத்திற்கு, இதே சுயஉதவிக் குழுக்கள் மூலம் ‘ஓ-ரிங்’ (O-ring) எனப்படும் சிறிய ரப்பரால் செய்யப்பட்ட, காற்று மற்றும் திரவம் வெளியேறாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் ஒரு காஸ்கட்டை (gasket) ஜாப் ஒர்க் அடிப்படையில் இந்த சுய உதவி குழு மூலம் செய்து தரவும் உந்துதலாக இருந்தார். இன்றளவும் மதுரை வட்டாரப் பகுதியில் சுமார் 200 பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பதை இப்பேரவையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில்துறையுடன் மகளிர் சுயஉதவிக் குழுக்களை இணைத்து ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களுக்கும் வாழ்வாதார வாய்ப்புகள் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி வருகிறோம். இதுதான் பேசப்பட வேண்டியது. ஊக்குவிக்கப்பட வேண்டியது. ஆனால், எதிர்க்கட்சியினர் நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் நுணுக்கமாகப் பிரித்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் சொன்னது ஒன்று; அதை மாற்றி செய்து தேவையில்லாமல் அதன் மீது கவனம் ஈர்க்கிறார்கள். பெண்களின் வேலைவாய்ப்பு, வருமானம், தொழில் வாய்ப்புகள் மற்றும் பெண்களின் முன்னேற்றம் மட்டுமே எங்களது கவனம்; அதுவே எங்களது அரசியல் என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share