ஆதவ் அர்ஜூனாவுக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பதிலடி- சட்டசபையில் என்ன நடந்தது?

Published On:

| By Mathi

Speaker JCD Prabhakar's Reply to Aadhav Arjuna

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது அரசு துறை செயலாளர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 27) நடந்த விவாதம்:

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: இன்றைக்கு நீங்கள் கேள்வி நேரத்தை எடுத்திருக்கிறீர்கள், 5 கேள்விகளுக்கு அனுமதி அளித்திருக்கிறீர்கள். 5 கேள்விகளுக்கும் நம்முடைய அமைச்சர்கள் அவர்கள் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார்கள், துணை கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறார்கள். கேள்வி நேரம் நடக்கும்போது, அந்த துறையினுடைய செயலாளர்கள் இந்த அவைக்கு வர வேண்டும். அவர்கள் நோட்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

எனவே, அதையும் நீங்கள் வலியுறுத்த வேண்டும். அதேபோல் இன்றைக்கு இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை நாங்கள் கொடுத்திருக்கிறோம். நானும் கொடுத்திருக்கிறேன், அனைத்து கட்சித் தலைவர்களும் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், நாங்கள் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவருவதற்கு முன்பாகவே, ஒரு அமைச்சர் அவர்கள் இதற்கு விளக்கம் சொல்லணும்னு சொல்றாரு. அதையும் நீங்கள் அனுமதி பண்றீங்க. இது வந்து உடனே நீங்கள் கரூர் இன்சிடென்ட்டோட கம்பேர் பண்றீங்க. அது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை.

ADVERTISEMENT

ஏனென்றால், கரூர் இன்சிடென்ட் நடக்கும்போது, இங்கே அவையில மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே இருந்து அதற்கு பதில் சொன்னார்கள். இப்போது முதலமைச்சர் அவர்களும் அவையில் இல்லை. சீப் செக்ரட்டரி தலைமைச் செயலாளரும் இல்லை.

எனவே, இதையெல்லாம் நீங்கள் கவனத்தில் கொண்டு, எந்தெந்த துறை பிரச்சினை வரும்போது அந்தந்த அரசு துறை அதிகாரிகள் இங்கே இருக்க வேண்டும் என்று நீங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: எதிர்க்கட்சித் தலைவர் இப்போது ஒரு வினா எழுப்பினார். முன்பு இருந்த நடைமுறை வேறு. இப்ப சட்டமன்றம் வந்து லைவ்ல வந்து கொடுத்துட்டு இருக்கறதுனால, இங்கே இருக்கக்கூடிய, இங்கே ஒரு வார் ரூம் வந்து கிரியேட் பண்ணி இருக்கோம். இங்கே இருக்கக்கூடிய அனைத்து எந்த டிபார்ட்மென்ட் வந்தாலும் கிட்டத்தட்ட, ஒரு நாளைக்கு அஞ்சு டிபார்ட்மென்ட்ல இருந்து எட்டு டிபார்ட்மென்ட் வரைக்கும் கேள்விகள் வருது. அனைத்து செயலாளர்களும் இங்கே இருக்கிற பக்கத்தில் உள்ள வார் ரூம்ல தான் இருக்கிறாங்கன்றதை நாங்கள் பதிவு பண்றோம்.

முன்னாடி லைவ் இருக்காது. இப்ப லைவ் இருக்கறதுனால எல்லாமே லைவ்லயே பார்த்து, செயலாளர்கள் எல்லாம் இங்கே இருக்கிறாங்க. சோ, அதை, அதை வந்து நாங்கள் பதிவு பண்றோம்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு: லைவ் என்பது எப்போதும் இருப்பது. அதை வெளியில வெளியிடாமல் இருப்போமே தவிர, இந்த கேள்வி பதில் கேட்கும்போது, துறையினுடைய அதிகாரிகள் எல்லாம் அங்கு இருப்பதுதான். குற்றச்சாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களுடைய துறை செயலாளர் இங்கு இருந்தால், கேள்வி கேட்டதைத் தவிர, வேறு பகுதி பல செய்திகளை சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். நீங்கள் அதற்கு பதில் சொல்கிறீர்கள். துறையினுடைய செயலாளர் இருப்பாரேயானால் குறிப்பெடுத்துக்கொள்வார்.

எனவே, துறையினுடைய செயலாளர் அவசியம் இருக்க வேண்டும். ஏன்னா இதுதான் பெரிய பாடி. சட்டமன்றம் தான் பெரிய பாடி. அந்த நேரத்தில் அதிகாரிகள் இங்கு இல்லை. இல்ல, முதலமைச்சர் இல்லை என்றால், முதன்மை செயலாளராவது இங்கு இருக்க வேண்டும். சீப் செக்ரட்டரியாவது இங்கு இருந்தால், இப்போது நேபாளம் பிரச்சனை அமைச்சர் சொல்கிறார், அப்போது குறிப்பெடுத்து என்ன பதில் என்றால், உடனடியாக சொல்வதற்கு, திருத்துவதற்கு சரியாக இருக்கும். அதற்காகத்தான் சொல்கிறோம்.

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்: இப்படிப்பட்ட சம்பவங்கள் வந்து இப்போதுதான் நடக்கிறது என்பது அல்ல. சில நேரங்களிலே இப்படி சம்பவங்கள் நடக்கிறபோது, ஏன் ஆளுங்கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறபோது, மாண்புமிகு துரைமுருகன் அவர்கள் சொன்னதை அப்படியே படிக்கிறேன் பாருங்க.

”மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அவை பெரியது, அதிகாரம் மிக்கது, சர்வாதிகாரம்மிக்கது. ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டுமானாலும் அரசாங்கம் இந்த அவையினுடைய அனுமதியைப் பெற்றாக வேண்டும்.

இந்த அவையிலே பேசுகிற உறுப்பினர்கள் பொறுப்பு வாய்ந்தவர்கள். தங்கள் கருத்தை அந்தந்த கட்சிக்கு ஏற்ப பேசுவார்கள். இவற்றையெல்லாம் கேட்டு, அந்தந்த இலாக்காவிற்கு உரியவர்கள், எந்தெந்த இலாக்காவிற்கு டிமாண்ட் வருகிறதோ, அந்தந்த இலாக்காவினுடைய அதிகாரிகள், செக்ரட்டரிஸ் வரிசையாக அமர்ந்திருப்பார்கள். இந்த அவையை அதிகாரிகள் மதிக்க வேண்டும்” என்றார்.

துரைமுருகன் இப்படி பேசிய பின்னர் சட்டசபை தலைவராக இருந்த பிடிஆர் பழனிவேல்ராஜன், “அவை முன்னவர் சொன்ன கருத்தை ஏற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருப்பிடத்திற்கு வர வேண்டும் என்று நான் ஆலோசனை சொல்லுகிறேன்” என்று முடித்து வைத்தார்.

அதைத்தான் சொல்றேன் நானும், முன்பு நடந்ததைப் போல இனி இல்லாமல், அதிகாரிகள் இருக்கையில் அமர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share