சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது என்றும், இவருக்கு வரலாற்றில் சிறப்பு இடம் இருக்கிறது என்றும் முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாராட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் உள்ளார்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், அவையில் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே காரசார விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
இதில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை மரபை மீறி பேசினாலோ, தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தினாலோ அதை அவை குறிப்பில் இருந்து நீக்குவதோடு கண்டிக்கவும் செய்கிறார்.
சபாநாயகரின் செயல்பாடுகள் கவனத்தை பெறும் நிலையில், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவரை பாராட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 28) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”ரொம்ப ரொம்ப பாராட்டத்தக்க வகையில் செயல்படுகிறார். அவருடைய குடும்பத்தினரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். நான் அமைச்சராக இருந்தபோது என்னுடைய செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக பாராட்டினார்கள்.
ஆனால் ஜேசிடி பிரபாகர் சிறப்பாக செயல்படுகிறார். எங்கள் அப்பாவு நல்ல பேரவை தலைவர் என்று சொல்வார்கள். ஆனால் அவருக்கு பெரிய அட்வாண்டேஜ் இருந்தது. அதாவது, அன்றைக்கு எதிர்க்கட்சி பெரியதாக இல்லை. கம்மிதான்.
அதுபோன்று ஆளும் கட்சி உறுப்பினர்களும் அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அதனால் அவையை நடத்துவது ஒப்பீட்டளவில் ஈஸியாக இருந்தது.
ஆனால் இன்று 50:50 என்ற அடிப்படையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆளும் கட்சியில் பெரும்பாலும் புது உறுப்பினர்கள் தான். அவர்களுக்கு எந்த மரபும், வரலாறும் தெரியவில்லை.
இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில், இவ்வளவு நடுநிலையாக, சிறப்பாக அவையை நடத்துகிறார். பேரவைத் தலைவர் எனக்கு முன் பின் அறிமுகம் இல்லை. நான் பார்த்ததும் இல்லை. அவருடைய செயல் பற்றி எனக்கு தெரியாது.
நான் கிட்டதட்ட 90 சதவிகிதம் வெளிநாட்டிலும், வெளிமாநிலத்திலும் இருக்கிறேன். அதனால் அவ்வளவாக பேரவை நிகழ்வுகளை பார்க்கவில்லை. பார்த்த அளவில் சொல்கிறேன். அவருக்கு வரலாற்றில் சிறப்பு இடம் கொடுத்தே ஆக வேண்டும். ரொம்ப ரொம்ப சிறப்பாக செயல்படுகிறார்” என்று கூறினார்.
பிடிஆரின் இந்த பேட்டியை தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஜேசிடி பிரபாகர், உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
