‘திருச்சி கிழக்கு’ எங்கள் இலக்கு அல்ல; ‘இனித் தமிழ்’ இயக்கம் தான் எங்கள் இலக்கு என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நடந்த ‘இனித் தமிழ்’ இயக்க நிகழ்வில் பேசிய அவர், “எங்கள் தமிழ்நாடு இயக்கத்தின் ஒரு அங்கமான ‘இனித் தமிழ்’ இயக்கம் சார்பில், தமிழில் கையெழுத்துத் தொடக்க விழா நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டு தமிழ் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
அப்போது அவர், “இந்த இயக்கத்திற்குப் பின்னால் எந்தவித அரசியல் லாபமோ பதவி ஆசையோ இல்லை. உலகிலேயே மூத்த மொழியான தமிழ் அழிந்து விடுமோ என்ற அச்சமும், மொழியைக் காக்க வேண்டும் என்ற கடமையும்தான் இதன் பின்னணியில் உள்ளது. ‘திருச்சி கிழக்கு’ எங்கள் இலக்கு அல்ல; ‘இனித் தமிழ்’ இயக்கம் தான் எங்கள் இலக்கு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரை தமிழில் கையெழுத்திடத் தயங்கும் மனப்பான்மை நிலவுகிறது. ஆங்கில வழி கற்றல் மற்றும் அன்றாட பயன்பாட்டில் தமிழ் புறக்கணிக்கப்படுவதை மாற்றி, மக்களிடையே தமிழ் உணர்வை விழிப்படைய செய்வதே எங்களது இயக்கத்தின் முதன்மை இலக்கு” என்று தெரிவித்தார்.
முதல்வர் ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில் அடுத்து வரும் இடைத்தேர்தலில் சகாயம் ஐஏஎஸ் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் நாமக்கல்லில் அவர் திருச்சி கிழக்கு எங்கள் இலக்கு அல்ல என பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
