‘விஜய் ஐ.நா சபைக்கே தலைவராக வரலாம்’ – ஆர்.எஸ். பாரதி

Published On:

| By Pandeeswari Gurusamy

சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியினர் செய்யும் தவறுகளை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி வருகிறார். ஆனால் தொலைக்காட்சிகள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் தவறான பிம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைக்க முயல்கின்றனர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் நடந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டம் நிறைவடைந்ததும் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியினர் செய்யும் தவறுகளை எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். ஆனால் தொலைக்காட்சிகள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் தவறான பிம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைக்க முயல்கின்றனர். ஊடகங்கள்தான் இதன் உண்மை நிலையை வெளிக் கொண்டு வந்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். தமிழக மக்களை இவர்களால் ஏமாற்ற முடியாது என்றார்.

ADVERTISEMENT

திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சமூக நீதிக் கொள்கைகள் மற்றும் 1921-ல் முத்தையா முதலியாரால் கொண்டு வரப்பட்ட கம்யூனல் ஜி.ஓ. (இடஒதுக்கீடு ஆணை) ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறை உணர வேண்டும். 1950-ல் இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தபோது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர் ஆகியோர் போராடினார்கள். இதன் விளைவாகத்தான் அரசியல் சட்டத்தின் முதல் திருத்தமே கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலக் கொள்கைக் குறிப்பில் தந்தை பெரியார், அம்பேத்கர், நேரு ஆகியோரின் பெயர்கள் தவறாமல் இடம்பெறும். ஆனால், தற்போதைய அரசு இவர்களின் பெயர்களைத் தவிர்த்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

பெரியார், அம்பேத்கர் படங்களை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். விஜய் இந்தியாவின் அடுத்த பிரதமராக வரலாம் எனப் பேசுவது அவர்களின் எல்லை இல்லாத கற்பனை. கற்பனைக்கு எந்த எல்லையும் கிடையாது; அவர்கள் ஐ.நா. சபைக்கே தலைவராக வருவார் என்று கூட சொல்லிக் கொள்ளட்டும் என்றார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் பேசியதற்கு அந்தப் பகுதி இளைஞர்களே தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

ADVERTISEMENT

தமிழ்த்தாய் வாழ்த்தை முறையாகப் பாட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். திருந்துகிறவர்கள் திருந்தட்டும் எனக் குறிப்பிட்டார். மூன்று பைல்களை முதல்வரிடம் கொடுத்து ஓபன் செய்யவில்லை முதல்வர் பொது மக்களுக்கு தவறான தகவல் தெரிவிக்கிறார் என கேஸ் போடலாம் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியிருந்தது குறித்த கேள்விக்கு, “துரைமுருகன் அவர்கள் சட்டமன்றத்துல நீண்ட நாள் அனுபவம் உள்ளவர். அவர் சொன்னால் சரியாக இருக்கும். சட்டத்துறையைச் சார்ந்தவர்கள் அதுக்குரிய நடவடிக்கை எடுப்பாங்க. எனக் கூறினார்

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share