சட்டப்பேரவைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டனுக்கு புதுச்சேரி போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அதேசமயம் புதுச்சேரியை பொறுத்தவரை எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஓட்டுனர்கள் வழங்கப்படவில்லை. எனவே இதை சுட்டிக்காட்டும் விதமாக என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முத்தியால்பேட்டை தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் நேற்று சட்டப்பேரவைக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘காருடன் ஓட்டுநர் வழங்க சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரிகள் கொடுப்பதில்லை’ என்று கூறியிருந்தார். அதாவது முதல்வரே அனுமதி அளித்தாலும் அரசு அதிகாரிகள் அதை கேட்பதில்லை என்று குறிப்பிடும் வகையில் இவ்வாறு கூறியிருந்தார்.
வையாபுரி மணிகண்டன் சட்டப்பேரவைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்த சூழலில் அவருக்கு புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து போலீசார் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அபராதம் விதித்துள்ளனர்.
அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துக்கு நம்பர் பிளேட் இல்லை என்பதால் அதற்கு 500 ரூபாயும், ஹெல்மெட் அணியாமல் வந்ததால் 1000 ரூபாயும் என மொத்தமாக 1500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதற்கான ரசீது அவரது கைப்பேசிக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.
சட்டப்பேரவைக்கு ஸ்கூட்டியில் வந்து கவனத்தை ஈர்த்த எம்எல்ஏவுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பேசுப்பொருளாகி இருக்கிறது.
