ஒரே ஒரு டாஸ்மார்க் கோப்பு திறக்கப்பட்டதுமே, உடனடியாக உதயநிதியின் நண்பர் ரத்தீஷ் ஊரைவிட்டு ஓடிவிட்டார்; துபாய்க்குச் சென்று பத்து நாட்கள் ஆகிவிட்டது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாவட்ட பொறுப்பு அமைச்சரான நிர்மல்குமார் பங்கேற்று சிறப்பு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில், “ஊழல் என்று சொன்னால் எல்லாருக்கும் கோபம் வருகிறது; ஊழல் என்றால், சட்டசபையில் கோபம் வருகிறது. ஊழல் நீங்கள் செய்யவில்லை என்று சொன்னால்தான் கோபம் வரவேண்டும். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். டாஸ்மார்க் ஊழல் தொடர்பாகக் கேஸ் போட்டுள்ளோம், எல்லோரையும் கைது செய்து உள்ளே வைத்துள்ளோம். டாஸ்மார்க் ஆரம்பித்து எல்லாத் துறைகளிலும் ஊழல் செய்து கொண்டிருந்தார்கள்.
இன்று எல்லாவற்றையும் தடுத்து நிறுத்தி நல்ல அரசாங்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இன்று எங்காவது போகும்போது லஞ்சம் கேட்டிருக்கிறார்களா? லஞ்சம் கேட்டால் ரிப்போர்ட் செய்யுங்கள், இது உங்களது அரசாங்கம். எங்காவது லஞ்சம், லாவண்யம் கேட்டால் கண்டிப்பாக ரிப்போர்ட் செய்யுங்கள்; இந்த அரசாங்கம் எந்தத் தவறும் செய்யக்கூடாது என்றுதான் நடந்து கொண்டிருக்கிறது.
மதுரை மாவட்டத்தில் எல்லா குவாரிகளையும் நிறுத்திவிட்டோம். எங்கெல்லாம் சட்டவிரோதமாகக் குவாரிகள் செயல்பட்டு வந்தனவோ, அத்தனையையும் நிறுத்தி விட்டோம். என்னிடம் கேட்டபோது, “சட்டபூர்வமான அனுமதி இருந்தால் கொடுங்கள்; அதில் விதிமீறல் இருந்தால் கேஸ் போடுங்கள்” என்றேன். இதற்கும் அரசாங்கத்திற்கும் அதாவது அந்தத் தொகுதி அமைச்சருக்கோ, எம்.எல்.ஏவுக்கோ யாருக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்கக் கூடாது. முன்னாள் இருந்த ஆட்சியாளர்கள் போல் அதற்கு ஆள் போட்டு வசூல் செய்வது எதையும் செய்ய மாட்டோம்.
அப்படி ஏதாவது சட்டவிரோதமாக நடந்தால், உங்கள் எல்லோருக்கும் முழு ஆதரவு உண்டு; எல்லோரையும் பிடித்துக் கேஸ் போடுங்கள். எங்கும் சட்டவிரோதமான கல்குவாரிகளோ, சட்டவிரோதமான மணல் கொள்ளையோ எதுவும் நடக்காது. போன ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான லாரிகள் இங்கிருந்து மணல், ஜல்லி, கல் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கேரளாவிற்கும் கர்நாடகாவிற்கும் சென்றது. இப்போது அது எல்லாவற்றையும் நிறுத்திவிட்டோம்.
நமது இயற்கை வளங்களை வேறு எங்கும் கொடுக்க முடியாது. ஒவ்வொரு நாளும் மக்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் நியாயமாக, நேர்மையாகச் செய்து கொடுக்கிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “கடந்த ஆட்சியில் ஒரு டெண்டர் ஒரு லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டால், தற்போது 75 ஆயிரம் ரூபாய்க்கு எடுக்கப்படுகிறது. ஒரே ஆண்டில் எப்படி 25 ஆயிரம் ரூபாய் குறைகிறது என்றால், 25 சதவீதம் கமிஷனாகப் போய்க்கொண்டிருந்தது தற்போது குறைந்துள்ளது. முன்பு டெண்டர் இப்படி விடப்பட்டதா என்று தெரியவில்லை; ஆனால், இதற்கு முன்பு 25 சதவீதம் கட்சி நிதியாக வாங்கி, யாரோ வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
அதெல்லாம் தற்போது மக்கள் பணமாக மாறி, உங்களுக்கு முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அவற்றுக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். யார் யாரெல்லாம் தவறு செய்தார்களோ அவர்கள் எல்லோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் பணத்தைத் திருடியவர்கள் மீது கண்டிப்பாக வழக்கு பதிவு செய்யப்படும், யாரும் தப்பிக்க இயலாது.
சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கேட்டதைப் போன்றே எல்லா கோப்புகளும் ஒவ்வொன்றாகத் திறக்கப்படும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் கோப்புகள் திறக்கப்படும், யாரும் தப்பிக்க முடியாது. ஒரே ஒரு டாஸ்மார்க் கோப்பு திறக்கப்பட்டதுமே, உடனடியாக உதயநிதியின் நண்பர் ரத்தீஷ் ஊரைவிட்டு ஓடிவிட்டார்; துபாய்க்குச் சென்று பத்து நாட்கள் ஆகிவிட்டது, சுற்றியிருந்த அனைவரும் தப்பித்துவிட்டனர்.
டாஸ்மார்க் ஊழல் விவகாரத்தில் யார் யாரெல்லாம் பவர் புரோக்கர்களாக இருந்தார்கள், கடந்த ஆட்சியில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக இருந்தவர்கள். யார் யார் என்பது நீதிமன்ற உத்தரவிலேயே உள்ளது. டாஸ்மார்க் வழக்கில் கைதானவர் அண்மையில் ஜாமீன் கேட்டுத் தாக்கல் செய்த மனுவிலேயே இந்த விவரங்கள் உள்ளன. யார் எப்படிப் பணம் வசூலித்தார்கள், எத்தனை கோடிப் பணம் வசூலிக்கப்பட்டது, ஒவ்வொரு இடத்திலும் பணம் எப்படி வசூலிக்கப்பட்டது, இத்தனை பேர் பவர் புரோக்கர்களாக இருந்தனர் என்ற விவரங்கள் நீதிமன்ற உத்தரவிலேயே உள்ளன.
ஆதாரங்களைக் கொண்டு அனைத்து நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும். மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தப்பிக்க முடியாது என்றார்.
