பண்டிகை வந்துவிட்டால் ஆன்லைனில் தள்ளுபடி மழைதான். அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் வரும் சலுகைகளுக்காகப் பலரும் காத்திருப்பார்கள். ஆனால் இந்த ஆர்வத்தைத்தான் சைபர் திருடர்கள் வலையாக விரிக்கிறார்கள். போலி இணையதளங்கள், கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் ஆள்களை வளைத்துப் போட்டு, ஒரு நொடி கவனக்குறைவில் பணத்தையும் கார்டு விவரங்களையும் சுருட்டிவிடுகிறார்கள்.
வங்கிக் கணக்கில் உள்ள பணம் மட்டுமல்ல, ஆதார், பான் கார்டு, கிரெடிட், டெபிட் கார்டு விவரங்களும் திருடுபோகும் ஆபத்து இருக்கிறது.
90% தள்ளுபடி… உண்மையா?
“Limited Period Deal”, “Flash Sale” என்று போட்டு, உடனே வாங்கச் சொல்லி அவசரப்படுத்துவது இவர்களின் பழைய தந்திரம். சந்தை விலையைவிட ரொம்பவே குறைவாக ஒரு பொருள் கிடைக்கிறது என்றால், வாங்குவதற்கு முன்னால் இது உண்மைதானா என்று சரிபார்த்துவிடுங்கள்.
பிரபல நிறுவனங்களின் பெயரில் ஓர் எழுத்தை மட்டும் மாற்றிப் போலி இணையதளங்களை உருவாக்குகிறார்கள். அதனால் இணையதள முகவரியை எழுத்துக்கு எழுத்து படித்துப் பார்க்கவும்.
தப்பிக்க என்ன செய்யலாம்?
முகவரியில் HTTPS பாதுகாப்புக் குறியீடு இருக்கிறதா என்று பாருங்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி வழியாக மட்டுமே வாங்குங்கள்.
முன்கூட்டியே பணம் கட்டச் சொல்லி வற்புறுத்தும் தளங்களைத் தவிர்த்துவிடுங்கள்.
நம்பவே முடியாத அளவுக்கு இருக்கும் தள்ளுபடி விளம்பரங்களைச் சந்தேகத்தோடு அணுகுங்கள்.
வங்கி விஷயத்தில் கூடுதல் கவனம்
ஆன்லைன் ஷாப்பிங்குக்கு உங்கள் கிரெடிட் கார்டின் பரிவர்த்தனை வரம்பைத் தேவைக்கேற்பக் குறைத்து வைத்துக்கொள்ளலாம்.
சர்வதேசப் பரிவர்த்தனை தேவையில்லை என்றால் அதை முடக்கி வைக்கலாம்.
mAadhaar செயலி மூலம் ஆதாரின் பயோமெட்ரிக் லாக்கைப் போட்டு வைக்கலாம்.
பொது இடங்களில் கிடைக்கும் இலவச Wi-Fi மூலம் ஷாப்பிங் செய்வதையோ வங்கிப் பரிவர்த்தனை செய்வதையோ தவிர்த்துவிடுங்கள்.
ஏமாந்துவிட்டால்: பதற்றப்படாமல் உடனே வங்கியைத் தொடர்புகொண்டு கார்டு, கணக்கை முடக்கச் சொல்லுங்கள். பிறகு 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணுக்கோ cybercrime.gov.in இணையதளத்திலோ புகார் கொடுங்கள். எவ்வளவு சீக்கிரம் சொல்கிறீர்களோ, பணத்தை மீட்கும் வாய்ப்பு அவ்வளவு அதிகம். OTP, கார்டு எண், CVV போன்றவற்றை யாரிடமும் சொல்லாதீர்கள்.
தள்ளுபடியில் சில நூறு ரூபாயைச் சேமிக்கப்போய், சேமிப்பையே இழந்துவிடக் கூடாது. “வாங்கும் முன் சரிபார்” என்பதை இந்தப் பண்டிகைக் காலத்தின் முதல் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.









