உலகின் மிகப்பெரிய கிரிப்டோ பரிவர்த்தனைத் தளமான பைனான்ஸில் சுமார் 6.3 பில்லியன் டாலர் (கிட்டத்தட்ட ரூ.53,000 கோடி) மதிப்பிலான சொத்துகள் திருடுபோன சம்பவம், கிரிப்டோ உலகையே ஒருநாள் உலுக்கிவிட்டது. இப்போது நிறுவனம் ஆறுதல் செய்தி சொல்லியிருக்கிறது. இழப்பில் சுமார் 95 சதவீதத்தை ஈடுகட்டிவிட்டதாகவும், நவம்பர் 1 முதல் படிப்படியாக வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க அனுமதிப்பதாகவும் அறிவித்துள்ளது.
அன்று என்ன நடந்தது?
அக்டோபர் 29 அன்று பைனான்ஸின் ஹாட் வாலெட்டுகளை (இணையத்தில் எப்போதும் இணைந்திருக்கும் டிஜிட்டல் பணப்பைகள்) குறிவைத்து சைபர் தாக்குதல் நடந்தது. இதில் சுமார் 6.3 பில்லியன் டாலர் மதிப்பிலான டிஜிட்டல் சொத்துகள் தவறான வழியில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. இந்தப் பரிவர்த்தனைகள் பத்து பிளாக்செயின் நெட்வொர்க்குகளில் நடந்திருப்பதாக பிளாக்செயின் ஆய்வு நிறுவனமான TRM Labs சொல்கிறது.
பணத்தை யார் ஈடுகட்டினார்கள்?
வாடிக்கையாளர்கள் இதில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, நிறுவனத்தின் சொந்த நிதியிலிருந்தும், பயனர்களுக்கான பாதுகாப்பு நிதியான SAFU-விலிருந்தும் இழப்பை ஏற்றுக்கொள்வதாகப் பைனான்ஸ் கூறியுள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்ட தொகையில் ஏறத்தாழ 95 சதவீதத்துக்கு இணையான சொத்துகளைத் திருப்பி வைத்துவிட்டதாம். மீதமுள்ள 5 சதவீதம், சந்தையில் குறைவாகக் கிடைக்கும் கிரிப்டோ டோக்கன்களாக இருப்பதால், அவற்றைத் திரட்ட இன்னும் சிறிது காலம் ஆகும் என்று நிறுவனம் விளக்கியுள்ளது.
பணம் எடுக்கும் வசதி எப்போது?
நவம்பர் 1 காலை 6 மணி முதல் 9 மணி வரை (GMT) முதல் கட்டமாகப் பணம் எடுக்கும் சேவை மீண்டும் தொடங்கும். இந்திய நேரப்படி இது காலை 11.30 முதல் பிற்பகல் 2.30 வரை. பிட்காயின், ஈதர், BNB, சோலானா, XRP, டோஜ்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளுக்கு இந்த வசதி படிப்படியாகத் திறக்கப்படும்.
வடகொரிய ஹேக்கர்கள் மீது சந்தேகம்
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் வடகொரியாவைச் சேர்ந்த ‘TraderTraitor’ என்ற ஹேக்கர் குழு இருப்பதாக அமெரிக்காவின் FBI தெரிவித்துள்ளது. திருடப்பட்ட சொத்துகளை ஈதராக மாற்றும் நகர்வுகள் தெரியவந்துள்ளதாகவும், அந்தப் பணம் எங்கெங்கு போகிறது என்பதைத் தொடர்ந்து கண்காணிப்பதாகவும் விசாரணை அமைப்புகள் கூறுகின்றன.
இதற்கிடையில், வாடிக்கையாளர்களின் சொத்துகள் பாதுகாப்பாக உள்ளன என்று பைனான்ஸ் மறுபடியும் உறுதி கொடுத்துள்ளது.









