”தமிழ்நாட்டுக்கு தனி கொடியை உருவாக்க வேண்டும்; அதை முதல்வர் விஜய் தமது கையால் முதலில் ஏற்ற வேண்டும்” என்று பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியிருப்பதற்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று (நவ.1) நடைபெற்ற ”தமிழ்நாடு நாள்” விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: மேடையில் பேசிவிட்டுப் போவது பெரிய விஷயம் இல்லை. எந்தச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டுமோ, அந்தச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு கொடி
தமிழ்நாட்டுக்கான கொடியை உருவாக்க வேண்டும். எத்தனையோ மாநிலங்களில் அந்தந்த மாநிலத்துக்கான ஒரு கொடி இருக்கிறது. நம் மாநிலத்துக்காக, தமிழை முதன்மைப்படுத்தி ஒரு கொடியை உருவாக்க வேண்டும். அந்தக் கொடியை நவம்பர் 1 அல்லது ஜூலை 18-ஆம் தேதி நம்முடைய முதலமைச்சர் கையால் முதல்முறையாக ஏற்ற வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஏற்ற வேண்டும்.
தேசியக் கொடிக்குச் சமமாக, தமிழின் பெருமையைப் போற்றக்கூடிய ஒரு கொடியைத் தமிழ்நாட்டுக்காக உருவாக்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.
8-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். சிபிஎஸ்இ பள்ளியாக இருந்தாலும் சரி, எந்தப் பள்ளியாக இருந்தாலும் சரி, தமிழைக் கட்டாயப்படுத்த வேண்டும். இந்த ஆட்சியில் அதைச் செய்ய வேண்டும்.
இன்றைக்குச் சில தனியார் பள்ளிகளில் தமிழில் பேசினாலே தவறு என்று சொல்கிறார்கள். ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும்.
அமைச்சர்களுடைய குழந்தைகள், சட்டமன்ற உறுப்பினர்களுடைய குழந்தைகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடைய குழந்தைகள் முதலில் தமிழைப் படிக்க வேண்டும். மாற்றம் நம்மிடமிருந்துதான் வர வேண்டும்.
ஆங்கிலம் உலகத்துடன் தொடர்புகொள்வதற்கான மொழி. வணிகத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஆங்கிலம் தேவை. ஆனால், நம்முடைய சிந்தனைக்கும் அறிவுக்கும் அடிப்படை தாய்மொழியான தமிழ்தான்.
நவம்பர் 1, ஜூலை 18-க்கு விடுமுறை
தமிழ்நாடு என்ற பெயருக்குப் பின்னால் மிகப்பெரிய போராட்ட வரலாறு இருக்கிறது. 1938-ல் தந்தை பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கினார். பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார்.
தமிழ்நாட்டின் எல்லைகளைக் காப்பாற்றுவதற்குப் பலர் போராடியிருக்கிறார்கள். வடக்கெல்லைப் போராட்டத்தை முன்னெடுத்த ம.பொ. சிவஞானம், தெற்கெல்லைப் போராட்டத்தை நடத்திய மார்ஷல் நேசமணி, தோழர் ஜீவா உள்ளிட்ட தலைவர்களின் தியாகங்களை நாம் நினைவுகூர வேண்டும்.
நவம்பர் 1 என்பது தமிழ்நாட்டின் எல்லைகளை உருவாக்குவதற்காகப் போராடியவர்களை நினைவுகூரும் நாள். ஜூலை 18 என்பது தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்ட வரலாற்றுடன் தொடர்புடைய நாள். இந்த இரண்டு நாட்களையும் கொண்டாட வேண்டும்.
சுதந்திர தினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் விடுமுறை அளிப்பதைப் போல, நவம்பர் 1 மற்றும் ஜூலை 18 ஆகிய இரண்டு நாட்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்.
டெல்லியில் இருந்து எத்தனை ஆதிக்கங்கள் வந்தாலும்…
50 ஆண்டுகளாக, 75 ஆண்டுகளாகப் பேசிக்கொண்டிருந்த விஷயங்களை நம்முடைய முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். சமூக நீதியைப் பற்றிப் பலர் மேடைகளில் பேசினார்கள். பெரியாரையும் அண்ணாவையும் பற்றிப் பேசினார்கள். ஆனால், நம்முடைய முதலமைச்சர் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்துக்குக் கொள்கை தெரியாது என்று விமர்சித்தவர்களுக்கு, சட்டமன்றத்தில் ஒவ்வொரு சட்டமாக நிறைவேற்றி பதிலளித்துக் கொண்டிருக்கிறோம். பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கை ஆகியவற்றை எங்களுடைய அரசியல் வழிகாட்டியாகக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடும் தமிழர் பண்பாடும் என்று வரும்போது, வட இந்தியாவில் இருந்து, டெல்லியில் இருந்து எத்தனை ஆதிக்கங்கள் வந்தாலும், உயிரே போனாலும் எங்களுடைய கொள்கை வழியில் நிற்போம். இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.
பாஜக எதிர்ப்பு
அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜகவின் தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டிற்கென தனிக் கொடியை உருவாக்க வேண்டும்.. மாநிலக் கொடியை முதலமைச்சர் விஜய் கையால் ஏற்ற வேண்டும் – ஆதவ் அர்ஜுனா.
தேவையில்லாத பேச்சு. தேசியக் கொடியே இந்திய ஒருமைப்பாட்டின் சின்னம். மாநிலங்களால் உருவாக்கப்பட்ட நாடு அமெரிக்காவில் மாநிலங்களுக்கென கொடி உண்டு. ஆனால், இந்தியா தனது நிர்வாக வசதிக்காக மாநிலங்களை உருவாக்கியது என்பதை ஆதவ் அர்ஜுனா தெரிந்து கொள்ள வேண்டும்.









