VIDEO: ”மோடியை பதவியில் இருந்து அகற்றுவோம்”- டெல்லி ராம் லீலா மைதானத்தை அதிர வைத்த இந்தியா கூட்டணி!

By Mathi

|

Published on 1 Nov 2026, 4:36 PM

Delhi-India Block Meeting

”பிரதமர் பதவியில் இருந்து மோடியை அகற்றுவோம்; அப்படி மோடியை அகற்றினால்தான் இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்” என்றும் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆவேசமாக பேசினர்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) ஆகியவற்றுக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று (நவம்பர் 1) இந்தியா கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இந்தப் பேரணியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “பாஜகவுக்கு யார் வாக்களிக்கிறார்கள்? அவர்களே தங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். மக்கள் அவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை.
தற்போதைய மத்திய அரசு மட்டுமல்ல, மகாராஷ்டிரா, பீகார், உத்தரப் பிரதேச மாநில அரசுகளும் வாக்குத் திருட்டு மூலம் அமைந்த அரசுகள்தான். இந்தத் திருடர்களை நாம் அகற்ற வேண்டும். மோடி வெளியேறினால்தான் ஜனநாயகம் பிழைக்கும். ஜனநாயகத்தைக் காப்பாற்ற மோடியை அகற்ற வேண்டும்” என்றார்.

ADVERTISEMENT

அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “ஒருகாலத்தில் தங்களை அசைக்க முடியாத அங்கதனின் கால் என்று கூறிக்கொண்டவர்களுக்கு (ராவணனின் அரசவையில் அங்கதன் தனது காலை ஊன்றி நிற்க, அதை யாராலும் அசைக்க முடியவில்லை என்பது ராமாயணக் கதை) இப்போது காலுக்குக் கீழே நிலமே இல்லை. காசி மக்கள் அவர்களுக்கு இரட்டை பூஜ்ஜியத்தைக் கொடுத்துவிட்டார்கள்.

மக்களிடம் சென்று வெற்றி பெற முடியாது என்பது பாஜகவுக்குத் தெரியும். அதனால்தான் தொடர்ந்து சதித்திட்டங்களைத் தீட்டுகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் வழியாகத் தங்களுக்கான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள், அதே உத்தரப் பிரதேச மக்களால் வெளியேற்றப்படுவார்கள். எப்படி வரவேற்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அதைவிடச் சிறப்பாக எப்படி வழியனுப்ப வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும். 2027-ல் பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் அப்படியொரு பிரியாவிடையை உ.பி. மக்கள் கொடுப்பார்கள். அவர்களால் மீண்டும் திரும்பி வர முடியாது.

அன்று மகாராணா பிரதாப் போரிட்ட ஹால்டிகாட்டி போர்க்களத்தைப் போல, இன்று டெல்லி ராம்லீலா மைதானம் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டக் களமாக மாறியுள்ளது. இங்கு திரண்டுள்ள மக்களும் அவர்கள் எழுப்பும் முழக்கங்களும் எந்த நேரத்திலும் மாற்றம் நிகழலாம் என்பதைக் காட்டுகின்றன” என்றார்.

மகாபாரதப் போர்- சகுனி மோடி: தேஜஸ்வி

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், “ராம்லீலா மைதானத்தில் வழக்கமாக ராமாயணம் அரங்கேற்றப்படும். ஆனால் இன்று வாக்குத் திருடர்களுக்கு எதிராக மகாபாரதப் போரை நடத்துகிறோம்.

மகாபாரதத்தில் சகுனி விளையாடிய சூழ்ச்சி அனைவருக்கும் தெரியும். மகாபாரதப் போர், போர்க்களத்தில் தொடங்கவில்லை. சூதாட்டத்தில்தான் தொடங்கியது. இப்போது சகுனி தனது சூழ்ச்சியை விளையாடிக் கொண்டிருப்பதால், நாங்கள் போராட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம்” என்றார்.

சரணடைய மாட்டோம்- மம்தா

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். உயிரைக் கொடுத்தாலும் போராடுவோம். ஆனால் சரணடைய மாட்டோம். எங்கள் வங்காளத்தை அவர்கள் கொள்ளையடித்துவிட்டார்கள். அவர்கள் எதைத்தான் கொள்ளையடிக்கவில்லை? ராம ஜென்மபூமிக்கான பணத்தையும் வக்ஃபு சொத்துகளையும் கொள்ளையடித்துவிட்டார்கள்.

காவல்துறையினரையே தங்களது கூட்டாளிகளாக மாற்றிவிட்டார்கள். பாஜகவுக்கென்று சொந்தமாகக் கட்சி அமைப்பு இல்லை. அதனால்தான் காவல்துறையினரைக் கொண்டு கட்சிப் பணிகளைச் செய்ய வைக்கிறார்கள். பாஜக ஆட்சியிலிருந்து வெளியேறும்” என்றார்.

இந்தப் பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் டெல்லியில் பேரணி நடைபெற்றது. காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் இதில் பங்கேற்று, வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

🔴LIVE : ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி போராட்டம் | Delhi | INDIA | Congress |

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel