தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்காக தமக்கு ரூ.5 கோடி லஞ்சம் தர முயற்சித்தனர் என்று பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் இன்று (நவ.1) நடைபெற்ற ”தமிழ்நாடு நாள்” விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: தமிழ் தாழாது, தமிழ் உயராது, தமிழ் தாழாது என்றெல்லாம் வாய்க்கு வந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எங்க அண்ணன் குப்புசாமி குரலில் தமிழ்த்தாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். உங்களை வணங்குறேன் அண்ணே, உங்களை நான் தலைவணங்குறேன்.
நான் இந்த மேடையில் வைத்துச் சொல்றேன், நெஞ்சம் நெகிழ்ந்திருக்கு. ரொம்ப நாள் குழந்தைப்பேறு இல்லாத ஒரு பெண்ணினுடைய வயிற்றில் ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் உருவானதைப் போல அரங்கம் நிரம்பி இருக்கிறது.. நெஞ்சம் நிறைந்திருக்கிறது, எங்கள் முதல்வருக்கு நன்றி..முதல் முறையாக இந்த அரங்கத்தில் இப்படி ஒரு கூட்டம்.
நவம்பர் 1 தமிழ்நாடு தினமாக்க வேண்டும் என்று சொன்னபோது, எந்த தயக்கமும் இன்றி, ஜூலை 18-ஐ நாம் ஆண்டாண்டு காலம் கொண்டாடி வருகிறோம், அது பெயர் வைத்த நாள். ஆனால் இந்த நவம்பர் 1, இதுதான் தமிழ்நாடு உருவான நாள் என்று வரலாற்றில் முதல் முறையாக நவம்பர் 1 தமிழ்நாடு தினம் என்பது பல நாள் கனவு. இந்தக் கனவைக் கருவாக்கி, உருவாக்கி இதற்கு செயல் வடிவம் தந்த மாண்புமிகு முதல்வருக்கு ஒரு அரங்கம் நிறைந்த கரவொலியை நாம் காணிக்கையாக்க வேண்டும். வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!
எது உலக அதிசயம் என்று கேட்டால், சீனாவில் இருக்கிற ஒரு குட்டிச் சுவரைச் சொல்வாங்க. இத்தாலியில் இருக்கிற ஒரு சாய்ந்த கோபுரத்தைச் சொல்வாங்க, பீசா கோபுரம் அது பேரு. ஒரு கோபுரம் சாய்ந்துவிட்டால் அதுவா அதிசயம்? நான் சொல்வேன், கட்டி முடித்து ஆயிரம் ஆண்டுகள் தாண்டி புயல், மழை, கோடை, நிலநடுக்கம் எல்லாம் தாண்டி அரை இன்ச் அசையாது நெஞ்சு நிமிர்த்தி இருக்கிற தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரம் உலக அதிசயம்.
என் குட்டிக் குழந்தைகள் வந்திருக்காங்க, குறள் குழந்தைகளே உங்களுக்கு என் அன்பு முத்தங்கள். உங்கள் மூலமாக தமிழ்த்தாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் தலைமுறை தலைமுறையாக. இந்தக் குழந்தைகளுக்கு நம்ம பரிசு தர்றப்போ ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் எல்லாம் தராங்க. ஆனால் நாங்க அந்த காலத்துல என்ன தெரியுமா தருவோம்? அந்த தஞ்சாவூர்ல இருந்த தலையாட்டி பொம்மை தருவோம். எந்தப் பக்கம் உந்தித் தள்ளினாலும் தானா இந்த புவியீர்ப்பு விசையை மீறி எழுந்து நிற்கும். வாழ்க்கையில யாரு உங்களை முடியாது முடியாதுன்னு தள்ளிவிட்டாலும், மறுபடியும் தன்னம்பிக்கையோடு எல்லாரும் எழுந்து நிற்கணும்னு சொல்ற தன்னம்பிக்கை பொம்மை அந்த தலையாட்டி பொம்மை
பொம்மையில இருந்து, உணவுல இருந்து, உடையில இருந்து, பேசும் மொழியில இருந்து… இந்தியாவுக்கு பாஷைதாங்க இருக்கு. இந்தி பாஷை, தெலுங்கு பாஷை, மராத்தி பாஷை; தமிழ் மொழி! மொழிக்கு மொழி என்று பொழிவது போல், மொழிவது போல் மொழிக்கே மொழி எனப் பெயர் வைத்த கூட்டம் எங்க தமிழ்க் கூட்டங்க! எல்லாரும் அவங்களுடைய தாய்மொழியில பேசுவாங்க, நாங்க மட்டும்தான் உலகத்தின் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான எங்க தமிழ் மொழியில பேசிக்கொண்டிருக்கிறோம். பெருமைமிகு கூட்டம், எங்கள் தமிழ்க் கூட்டம்.
வந்த விருந்தினருக்கு திருக்குறள் புத்தகத்தை நாங்க கொடுத்திருக்கிறோம். எப்ப முதல்வர் கிட்ட நான் போனாலும் எனக்கு ரொம்ப ஆசையா இருக்கும், அவருக்குப் பிடிச்ச வரி ஒன்னு இருக்கு:
‘காவியத் தமிழை கம்பன் தந்தான், கவிதைத் தமிழை இளங்கோ தந்தான், வாழ்வியல் தமிழை எங்கள் வள்ளுவர் தந்தார்; அதிலிருந்து ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ தான் உன் வழிகாட்டி வாசகம் என்று எங்கள் வெற்றித் தலைவர்தான் எங்களுக்கெல்லாம் சொல்லித் தந்தார்!’
குறளும் கழகமும் ஒன்று எங்களுக்கு! தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரைக்கும் இந்த ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’னு ஒரு நல்ல தொடக்கம், அந்த வழிகாட்டி வாசகத்தை எடுத்து வச்சார் பாருங்க எங்களுடைய தங்கத் தளபதி! குறள் காட்டிய பாதையில் செல்லக்கூடிய குழந்தைகள் நாங்கள். நினைத்துப் பார்க்கிறேன் அண்ணன் திருமாவினுடைய எத்தனை நாள் கனவு இது, இந்த தமிழ்நாடு தினம். எத்தனை தூய தமிழ்த்தேசியம் பேசுபவர்களுக்கு இது பெருங்கனவு. தமிழ்நாடு தினமாக இதை உருவாக்குவதற்காக எத்தனை பெரிய போராட்டம்!
எங்க அண்ணன் ஜெகதீச பாண்டியன் இந்தச் செய்தி கேள்விப்பட்டதும் ஓடி வந்து கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார்; எத்தனை தமிழ்த் தொண்டர்கள் காத்திருந்தோம்! எந்தப் பாரபட்சமும் கிடையாது, அரசியல் வேறுபாடு கிடையாது. வரலாற்றுல இப்படி ஒரு முதல்வரை நீங்க பார்த்திருக்க முடியாது. இன்ஸ்டாகிராம்ல, சமூக வலைதளத்துல ஒருத்தர் இருக்கார், கதிரவன் சார் வந்திருக்கீங்களா? கதிரவன் ஐயா… அவர் எங்களை திட்டி, நாம வைக்கிற பதாகையில பேனர்ல எழுத்துப் பிழைகளை எல்லாம் சுட்டிக் காமிச்சு திட்டி வீடியோ போடுவார். ஆனால் அதற்காக அவர் திட்டினதால நாங்க வெறுக்கல; அவர் திட்டல் எங்களைத் திருத்துதுன்னு அவருக்கும் சேர்த்து இந்த மேடையில் விருது தரப்போற முதல்வர் எங்களுடைய முதல்வர்! தமிழ்ச் செம்மல் விருது தரோம் அவருக்கு. வாழ்த்துகள் கதிரவன் ஐயா, உட்காருங்க. உங்க தமிழ்ப்பணி தொடரணும்.
ஒரு நாள் இல்லைங்க, ஒவ்வொரு நாளும் இந்தத் தமிழை கொண்டாடச் சொல்லியிருக்கிறார் எங்க தங்கத் தளபதி. திருக்குறள் புத்தகம் எழுதுறோம், முதல்ல எதையாவது வாழ்த்தித் தொடங்கணும், அந்த அதிகாரம் பேரு ‘கடவுள் வாழ்த்து’. ரெண்டாவது கடவுளை வாழ்த்தியாச்சு, ஏதாவது ஒரு சிறப்பை சொல்லணும்ல, என்ன சிறப்பு? எழுதுன அவர் சிறப்பைச் சொன்னாரா? இல்லை, ‘வான் சிறப்பு’! கடவுளுக்கு அடுத்து வானத்தை வச்சிட்டார். ஏன்னா கடவுளை மாதிரி வானம்தான் ஏழை பாழை பார்க்கிறதில்லை, எல்லாருக்கும் சமமா பெய்யுது. இப்போ கடவுளை வாழ்த்தியாச்சு, வான் சிறப்பை சொல்லியாச்சு, ஏதோ ஒரு பெருமையை சொல்லணும். வள்ளுவர் அவர் பெருமையைச் சொன்னாரா? இல்லை, ‘நீத்தார் பெருமை’யைச் சொன்னாருங்க.
இப்போ கடவுளை வாழ்த்தியாச்சு, வானத்து சிறப்பை சொல்லியாச்சு, நீத்தார் பெருமையை சொல்லியாச்சு. ‘The purpose of the book’—எதற்காக இந்த நூல் எழுதப்படுது, அதனுடைய குறிக்கோளை நாலாவது அதிகாரத்துல போட்டார் பாருங்க, ‘அறன் வலியுறுத்தல்’! உலகத்தில் அறத்தை வலியுறுத்தக்கூடிய ஒரு நூல் இருக்கிறது, ஒரு வேதம் இருக்கிறது என்று சொன்னால் அது இந்த திருக்குறள் மட்டும்தாங்க, அந்த அதிகாரத்தின் பெயர் அறன் வலியுறுத்தல்! கடவுளை வாழ்த்தி, வான் சிறப்புச் சொல்லி, நீத்தார் பெருமை சொல்லி, அறன் வலியுறுத்தி… என்ன அறம்? முதல்ல என்ன அறம் சொல்லப் போறாரு? இல்லறத்திலிருந்து தொடங்குறாருங்க. வாழ்க்கை நம் வீட்டிலிருந்து தொடங்குது அறம்.
ரூ.5 கோடி லஞ்சம் தர முயற்சி
பெருமைமிகு இந்த மேடையில வச்சு மாண்புமிகு முதல்வரோடு எனக்கு வந்த சில அனுபவங்களைச் சொல்லப் போறேன். இதுவரைக்கும் நான் சொன்னதில்லை, ஊடக நண்பர்கள் வந்திருக்கீங்க. தம்பி லயோலா மணிக்கு மட்டும் தெரியும்.
‘இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்குக் கொடுக்கச் சொல்லுங்க, அமைச்சர் ராஜ்மோகனுக்கு 5 கோடி ரூபாய் நான் தர்றேன்’ அப்படின்னு ஒருத்தர் பேசினார்.
சிரிச்சுகிட்டே லயோலா மணிகிட்ட நான் சொல்லி அனுப்பினேன்: ‘தம்பி, 500 கோடி கொடுத்தாலும் யாருக்கும் பொருத்தமில்லாத ஒருத்தருக்கு ஒரு பதவி கூட தளபதி (முதல்வர் விஜய்) தரமாட்டார். நான் தளபதியின் தம்பி; பொருத்தமுள்ள புஷ்பவனம் குப்புசாமி அண்ணனுக்கு மட்டும்தான் ஒரு ரூபாய் வாங்காம அந்தப் பதவியை தளபதி தரச் சொல்லியிருக்காருன்னு சொல்லி அனுப்புனேன்’. இன்னைக்கு வரைக்கும் நான் வெளில சொன்னதில்லை அண்ணே, இது எங்க கடமை அண்ணே, உங்களுக்குச் செய்வது எங்க கடமை.
நெடுஞ்சாலைத்துறை என்று சொன்னால் திரும்பிய திசையெல்லாம் இத்தனை ஆண்டுகள் எப்படி இருந்ததுன்னு உங்களுக்குத் தெரியும். ஒரு அமைச்சர் முதல் கூட்டம் போட்டு, ‘நீங்க யாருக்கும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் தராதீங்க’ன்னு கான்ட்ராக்டர்கள் கிட்ட சொல்றாங்கன்னு சொன்னா இவர் மட்டும் இல்லை, இங்க இருக்கிற ஒவ்வொரு துறையும்.. ஆவினா இருக்கட்டும், சமூக நீதியா இருக்கட்டும், ஏன் நீர்வளத் துறையில… இதுவரைக்கும் தமிழ்நாடு முதல் முறையாக லஞ்சத்தை வெறுக்கக்கூடிய அமைச்சர்களைக் கொண்டிருக்கக்கூடிய ஒரு அமைச்சரவையை சந்தித்துக் கொண்டிருக்கிறது! இதுவும் ஒரு அறம். இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.










