சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. அடுத்த 6 மணி நேரத்தில் ‘முரசு’ புயலாக மாறும்!

By Mathi

|

Published on 1 Nov 2026, 11:00 AM

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவம்பர் 1) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் ‘முரசு’ புயலாக மாறும் என்றும், நவம்பர் 3-ந் தேதி காலை ஆந்திர கடற்கரையில் தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. அப்போது அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இது சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே 700 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு தெற்கு – தென்கிழக்கே 770 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே 770 கி.மீ. தொலைவிலும், ஓங்கோலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 810 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

நேற்று (அக்டோபர் 31) இரவு 11.30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து 830 கி.மீ. தொலைவில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை 5.30 மணிக்கு 700 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. புயலாக உருவானதும் ‘முரசு’ என்று பெயரிடப்படும். அதனைத் தொடர்ந்து நாளை (நவம்பர் 2) மத்திய மேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீவிர புயல் தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 3-ந் தேதி காலை ஆந்திர மாநிலம் நெல்லூர் – நரசாபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel