இன்று நள்ளிரவுக்குள் ‘முரசு’ புயலாக மாறும்.. சென்னையில் இருந்து எவ்வளவு தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்?

By Mathi

|

Published on 1 Nov 2026, 5:37 AM

Cyclone Murasu-Bay of Bengal

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவம்பர் 1) நள்ளிரவுக்குள் ‘முரசு’ புயலாக வலுப்பெறும் என்றும், நவம்பர் 3-ந் தேதி காலை ஆந்திர கடற்கரையில் தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.

ADVERTISEMENT

நேற்று (அக்டோபர் 31) இரவு 11.30 மணி நிலவரப்படி, இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு வங்கக்கடலில் 10.9 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 87.5 டிகிரி கிழக்கு தீர்க்கரேகைப் பகுதியில் மையம் கொண்டிருந்தது.

இது சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு தெற்கு – தென்கிழக்கே 880 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. மேலும் மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவிலும், ஓங்கோலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 950 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

ADVERTISEMENT

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நண்பகலுக்குள் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று நள்ளிரவுக்குள் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெறும். புயலாக உருவானதும் இந்தியா பரிந்துரைத்த ‘முரசு’ என்ற பெயர் சூட்டப்படும்.

ADVERTISEMENT

நாளை (நவம்பர் 2) மத்திய மேற்கு வங்கக்கடலில் மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறும்.

இந்தத் தீவிர புயல் நவம்பர் 3-ந் தேதி அதிகாலை தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு வந்தடையும்.

பின்னர் நவம்பர் 3-ந் தேதி காலை ஆந்திர மாநிலம் நெல்லூர் – நரசாபுரம் இடையே தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel