இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் இன்று (அக்.31) இந்தியா கூட்டணிக் கட்சிகள் நடத்திய மாதிரி நாடாளுமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஞானேஷ் குமார் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

டெல்லியில் ராஜாஜி மார்கில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லம் இன்று நாடாளுமன்றமாக மாறியிருந்தது. அதுவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் மாதிரி நாடாளுமன்றம்.

சபாநாயகர் மீரா குமார்
உண்மையில் இந்த நிகழ்ச்சியை முதலில் டெல்லி அசோகா ஹோட்டலில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். பின்னர் ராம்லீலா மைதானத்தில் நடத்த முயன்றனர். ஆனால் இடம், அனுமதி தொடர்பான சிக்கல்களால் கடைசியில் கார்கேவின் இல்லமே மாதிரி நாடாளுமன்றமாக மாறியது. அதுவும் நேற்றே நடைபெற வேண்டிய நிகழ்ச்சி. டெல்லியில் பெய்த மழையால் ஒருநாள் தள்ளிப்போனது.
‘மக்கள் பதவி நீக்க விசாரணை’ (People’s Impeachment) என்று பெயரிடப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்காக கார்கேவின் வீட்டுத் தோட்டத்தில் நாடாளுமன்றம் போலவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மைய மண்டபத்தை நினைவுபடுத்தும் வகையில் பின்னணி அமைக்கப்பட்டிருந்தது. தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போல அமர்ந்திருந்தனர்.
இன்றைய மாதிரி நாடாளுமன்றத்தின் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தவர் மீரா குமார். 2009- ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக இருந்த மீரா குமார், மீண்டும் அதே பொறுப்பை ஏற்றதுபோல மாதிரி நாடாளுமன்றத்தை நடத்தினார். சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத், திரிணமூல் காங்கிரஸின் சவுகதா ராய் ஆகியோர் துணைத் தலைவர்களாக அமர்ந்தனர்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, டெரிக் ஓ பிரையன், தர்மேந்திர யாதவ் என இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் வந்திருந்தனர். இவர்களுடன் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறும் பொதுமக்களும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். ராகுல் காந்தி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் நேரலையாகவும் ஒளிபரப்பினர்.

தேசிய கீதத்துடன் தொடங்கிய மாதிரி நாடாளுமன்றம்
தேசிய கீதத்துடன் மாதிரி நாடாளுமன்றம் தொடங்கியது. ஆனால் தொடக்கத்திலேயே சபாநாயகர் மீரா குமாருக்கு ஒரு சிக்கல். அவர் பேசத் தொடங்கியபோது மைக் வேலை செய்யவில்லை. சிறிது நேரம் கழித்துதான் சரியானது.
உண்மையான நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் மைக்குகள் ஆஃப் செய்யப்படுவதாக ராகுல் காந்தி அடிக்கடி குற்றம்சாட்டி வரும் நிலையில், அவர் பங்கேற்ற மாதிரி நாடாளுமன்றத்திலும் மைக் பிரச்சனை ஏற்பட்டது சுவாரசியம்தான்.
பின்னர் பேசிய மீரா குமார், வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்கள் நீக்கப்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை என்றார். ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை முன்மொழிய மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாய்ப்பு கொடுத்தார்.

கார்கே அடுக்கிய குற்றச்சாட்டுகள்
அப்போது எழுந்து பேசிய கார்கே, ஞானேஷ் குமார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பாஜகவுடன் சேர்ந்து நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களில் முறைகேடு செய்வதற்கான சதித்திட்டத்தில் ஞானேஷ் குமார் ஈடுபட்டுள்ளதாகக் கார்கே குற்றம்சாட்டினார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் சுமார் 13.2 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வாக்களிக்கத் தகுதியுள்ள மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன் வாக்காளர் பதிவு தொடர்பான படிவம் 6 விதிகளை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஞானேஷ் குமார் மாற்றியதாகவும் குற்றம்சாட்டினார்.
ERONET, ECINET என்ற மென்பொருள்கள் மூலம் வாக்காளர் பட்டியல் தொடர்பான அதிகாரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர் தேர்தல் அதிகாரிகளால் சுதந்திரமாக முடிவெடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தில் ஞானேஷ் குமாருடன் மேலும் 2 தேர்தல் ஆணையர்கள் இருக்கின்றனர். ஆனால் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அவர்கள் ஒதுக்கிவைக்கப்பட்டதாகவும், அவர்கள் குறைந்தது 14 முறை ஆட்சேபனை தெரிவித்திருந்ததாகவும் கார்கே குற்றம்சாட்டினார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் சொல்வதைத்தான் ஞானேஷ் குமார் செயல்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும்
இப்படி குற்றச்சாட்டுகளை அடுக்கிய கார்கே, 3 முக்கியக் கோரிக்கைகளையும் முன்வைத்தார். ஞானேஷ் குமாரைத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். 2023-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கைகள்.
தொடர்ந்து பேசிய கார்கே, “தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறோம். 2023-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மூலம் ஞானேஷ் குமாருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களின் வாக்குரிமையைப் பறிப்பது அரசியலமைப்புக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது. எனவே ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்து சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
சுமார் 30 நிமிடங்கள் பேசிய கார்கே, தனது பேச்சை முடித்ததும் தனக்குப் போதுமான நேரம் கொடுத்ததற்காகச் சபாநாயகர் மீரா குமாருக்கு நன்றி தெரிவித்தார். இதைக் கேட்டதும் மீரா குமார் புன்னகைத்தார்.

ராகுல் காந்தி எழுப்பிய கேள்வி
கார்கேவைத் தொடர்ந்து பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தேர்தல் ஆணையத்தை விட்டுவைக்கவில்லை. நாடு முழுவதும் 13.3 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், 7 வாக்காளர்களில் ஒருவரின் பெயர் நீக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சுமார் 3 சதவீத வாக்குகள்தான் வித்தியாசம் இருந்தது. ஆனால் இப்போது 15 சதவீத வாக்காளர்கள் தகுதியற்றவர்கள் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. அப்படியானால் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் எப்படி நடந்தது? அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.பி.க்களின் வெற்றி எந்த அளவுக்கு நியாயமானது என்ற கேள்வியை ராகுல் காந்தி எழுப்பினார்.
ஞானேஷ் குமார் நீண்ட காலம் தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்க முடியாது என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து எழுப்புவோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். தேர்தல் ஆணைய அதிகாரிகள் தங்களுக்குச் சட்டப் பாதுகாப்பு இருக்கிறது என்பதற்காக எதையும் செய்துவிட்டுத் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார்.

ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
கார்கே கொண்டு வந்த தீர்மானத்தின் மீது இந்தியா கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் பேசினர். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதாகவும், தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பின்னர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தீர்மானத்தில் இடம்பெற்றது.
மீரா குமார் சொன்ன சம்பவம்
இந்த தீர்மானம் நிறைவேறியதும் மீரா குமார் ஒரு சுவாரசியமான கருத்தைச் சொன்னார். தான் 5 ஆண்டுகள் மக்களவை சபாநாயகராக இருந்தபோதுகூட ஒரு எதிர்ப்புக் குரலும் இல்லாத நாடாளுமன்றத்தைப் பார்த்ததில்லை என்றார். உண்மையான நாடாளுமன்றத்தில் காண முடியாத ஒருமித்த கருத்தை மாதிரி நாடாளுமன்றத்தில் பார்த்ததாக மீரா குமார் கூறியது சுவாரசியமாக இருந்தது.
மஹுவா மொய்த்ராவைக் கண்டித்த மீரா குமார்
இந்த மாதிரி நாடாளுமன்றத்தில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், திரிணமூல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா, சாகரிகா கோஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதில் பேசிய சிவசேனா கட்சியின் அரவிந்த் சாவந்த், பாஜக எதிர்க்கட்சிகளை உடைப்பதாகவும், எம்.எல்.ஏ.க்களைத் தங்கள் பக்கம் இழுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் அரவிந்த் சாவந்த் பேச்சை முடித்தார். உடனே மீரா குமார், “ஆப்கா தன்யவாத்… பஹுத் தன்யவாத்” என்று நன்றி தெரிவித்தார். நேரத்துக்குள் பேச்சை முடித்ததற்காகவும் அவரைப் பாராட்டினார்.
ஆனால் மஹுவா மொய்த்ரா பேசும்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. அதன்பிறகும் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இதனால் பேச்சை முடிக்குமாறு மீரா குமார் பலமுறை கூறினார். மற்ற உறுப்பினர்களுக்கான நேரத்தையும் எடுத்துக்கொள்வதாகக் கண்டித்தார். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறும் பொதுமக்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை இந்த மாதிரி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தனர்.

மீண்டும் ஒலித்த மீரா குமாரின் ‘பைட் ஜாயியே’
மக்களவை சபாநாயகராக மீரா குமார் இருந்தபோது அடிக்கடி பயன்படுத்திய இந்தி வார்த்தை ‘பைட் ஜாயியே’ (Baith Jaaiye). அதாவது, ‘உட்காருங்கள்’ என்பதுதான் அதன் அர்த்தம். இன்றைய மாதிரி நாடாளுமன்றத்திலும் அந்த வார்த்தை மீண்டும் ஒலித்தது.
மாணவர் அமைப்பைச் சேர்ந்த ரிது பராலா தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைத் தாண்டிப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது “பைட் ஜாயியே… கிருபா கர்கே பைட் ஜாயியே” என்று மீரா குமார் பலமுறை கூறினார். அதாவது, ‘தயவுசெய்து உட்காருங்கள்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் ரிது பராலாவோ தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். 2009 முதல் 2014 வரை மக்களவையில் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்த மீரா குமார் பயன்படுத்திய அதே வார்த்தை, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாதிரி நாடாளுமன்றத்திலும் ஒலித்தது.
அன்று மாதிரி நாடாளுமன்றத்தை எதிர்த்த மீரா குமார்
இதில் இன்னொரு சுவாரசியமான வரலாறும் இருக்கிறது. 2010-ல் எம்.பி.க்களின் சம்பள உயர்வு விவகாரத்தில் நாடாளுமன்றத்துக்குள்ளேயே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாதிரி நாடாளுமன்றம் நடத்தினர். அப்போது பாஜகவின் கோபிநாத் முண்டே சபாநாயகராகவும், லாலு பிரசாத் யாதவ் பிரதமராகவும் செயல்பட்டனர். அன்றைய மக்களவை சபாநாயகராக இருந்த மீரா குமார், அந்த மாதிரி நாடாளுமன்றத்தை ஏற்கவில்லை. நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பது தொடர்பாகக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அவரே மாதிரி நாடாளுமன்றத்துக்குச் சபாநாயகராக வந்திருக்கிறார்.
‘வேற’ முகம் காட்டிய மீரா குமார்
இந்த நிகழ்ச்சியில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் போராடுவது குறித்துப் பேசிய மீரா குமார், “சர் பர் கஃபன் பாந்த் கே” (Sar par kafan baandh ke) என்ற இந்தி வார்த்தையையும் பயன்படுத்தினார். அதாவது, உயிரையும் பொருட்படுத்தாமல் போராடத் தயாராக இருப்பது என்பதுதான் அதன் பொருள். வழக்கமாக அமைதியாகப் பேசும் மீரா குமார், ஜனநாயகத்தைப் பாதுகாக்க எதையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று ஆவேசமாகப் பேசியதும் கவனத்தை ஈர்த்தது.

ஹிங்லீஷில் பேசிய துரை வைகோ
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பேசும் போது, “எனக்கு இந்தி தெரியாது; ஆனால் தமிழ்நாடு என்ன சொல்ல விரும்புகிறது என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால் ஹிங்கிலீஷில் (இந்தி + ஆங்கிலம்) பேச விரும்புகிறேன்” என்றார்.
அதனைத் தொடர்ந்து ”Hum mein se zyadatar Tamil log Hindi nahi bol sakte. Lekin Tamil Nadu zor shor se yeh awaaz uthata hai. Woh chori band honi chahiye. Chief Election Commissioner Gyanesh Kumar ko istifa dena chahiye. Samvidhan aur loktantra ki raksha honi chahiye” என பேசினார் துரை வைகோ. அதாவது, ”எங்களில் பெரும்பாலான தமிழர்களுக்கு இந்தி பேசத் தெரியாது. ஆனால் தமிழ்நாடு தனது குரலை உரக்க எழுப்புகிறது. அந்தத் திருட்டு நிறுத்தப்பட வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். அரசியலமைப்புச் சட்டமும் ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும்” என ஹிங்கிலீஷில் துரை வைகோ பேசினார். இதன் பின்னர், “மதச்சார்பின்மை வாழ்க! சமூகநீதி வாழ்க! ஜனநாயகம் வாழ்க” என ஆங்கிலத்தில் முழங்கினார் துரை வைகோ. துரை வைகோவின் இந்த பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பாராட்டுகளை அள்ளிய நேஹா போரா
இன்றைய மாதிரி நாடாளுமன்றத்தில் மாணவர் சங்க தலைவரான நேஹா போராவும் பங்கேற்று ஆவேசமாக பேசினார். அப்போது, “ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதற்காக உங்களது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். மென்பொருள்களின் பின்னால் ஒளிந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்கிறீர்கள். இது ஜனநாயகத்தைச் சீர்குலைக்கத் திட்டமிட்டு நடத்தப்படும் சதி. உங்களைப் பதவி நீக்கம் செய்வதோடு நிற்கக்கூடாது. சிறையிலும் அடைக்க வேண்டும்” என்று ஆவேசமாகப் பேசினார். மேலும், “மக்களின் குரலுக்கு நாடாளுமன்றம் செவிசாய்த்திருந்தால், இன்று கார்கேவின் வீட்டில் நடக்கும் இந்த நிகழ்ச்சி நாடாளுமன்றத்திலேயே நடந்திருக்கும்” என்றும் நேஹா போரா கூறினார். நேஹா போராவின் ஆவேசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, ‘இவரைப் போன்றவர்கள் உண்மையான நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும்’ என்கிற கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பாஜக எதிர்ப்பு
இதனிடையே இந்தியா கூட்டணியின் மாதிரி நாடாளுமன்றத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் வெளியே மாதிரி நாடாளுமன்றம் நடத்துவது அரசியலமைப்பு நிறுவனங்களை அவமதிக்கும் செயல் என்று விமர்சித்தார். தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக இருந்தால் எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றன. பாதகமாக இருந்தால் குற்றம்சாட்டுகின்றன என்றும் தெரிவித்தார். வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெரிவித்துள்ளார்.
நாளைய பேரணி..
மாதிரி நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து நாளை (நவ.1) டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டப் பேரணி நடத்த இந்தியா கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஆகியவற்றை முன்வைத்து இந்தப் பேரணி நடைபெற உள்ளது.
டெல்லி கன்னாட் பிளேஸ் அருகே உள்ள மின்டோ ரோடு சந்திப்பில் இருந்து அஜ்மீரி கேட் வழியாக ராம்லீலா மைதானத்துக்கு ஊர்வலமாகச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் இந்த ஊர்வலத்துக்கு அனுமதி பெறப்படவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மின்டோ ரோடு சந்திப்பில் இருந்து ஊர்வலமாகச் செல்வதற்குத் தனியாக அனுமதி கேட்கப்படவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.
மேலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்குள் நிகழ்ச்சியை முடித்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை திட்டமிட்டபடி ஊர்வலம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.









