ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவி மீது இளைஞர் ஒருவர் மின்சார ரம்பத்தால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு பகுதியில் உள்ள மாவட்ட ஊராட்சி உயர்நிலைப் பள்ளியில் இன்று (அக். 31) காலை சுமார் 10.30 மணிக்கு மாணவர்கள் வகுப்பறையில் இருந்தனர். அப்போது மின்சார ரம்பத்துடன் பள்ளிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை குறிவைத்துத் தாக்கினார்.
இதில் மாணவியின் முகம், தலை, முதுகு, கழுத்துப் பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. வலது கை பெரும்பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அந்த மாணவியை அங்கிருந்தவர்கள் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அனந்தபூர் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்ற மற்றொரு மாணவிக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாக்குதலுக்குப் பிறகு மின்சார ரம்பத்தை வகுப்பறையிலேயே போட்டுவிட்டு அந்த இளைஞர் தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
நடந்தது என்ன? ஆசிரியை விளக்கம்
இந்தக் கொடூரத் தாக்குதல் நடந்தபோது வகுப்பறையில் கணிதப் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை, நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பேட்டியளித்து ஆசிரியை, “10-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென இளைஞர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்தார். அவரது முகத்தை நான் சரியாகக் கவனிக்கவில்லை. கையில் சத்தம் எழுப்பியபடி இயங்கிக் கொண்டிருந்த இயந்திரம் ஒன்றை வைத்திருந்தார். உள்ளாட்சித் தேர்தல் நேரம் என்பதால் பள்ளியில் ஏதாவது பழுதுபார்க்கும் பணிக்காக வந்திருக்கலாம் என்று முதலில் நினைத்தேன்.
ஆனால் அந்த இளைஞர் நேராக ஒரு மாணவியை நோக்கிச் சென்றார். அதுவரை நடந்ததுதான் எனக்கு நினைவிருக்கிறது. பயத்தில் சுவரோடு ஒதுங்கி நின்றுவிட்டேன். மாணவர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். என்னை மாணவர்கள் வெளியே அழைத்து வந்தார்களா அல்லது நானாக வெளியே வந்தேனா என்பதுகூட நினைவில்லை.
அந்த இளைஞர் தனியாகத்தான் வந்தார். மிக வேகமாக வகுப்பறைக்குள் நுழைந்தார். என்ன நடந்தது, எதற்காக நடந்தது என்பது எங்களுக்குப் புரியவில்லை. வெளியே ரத்தமும் ரத்தக் காலடித் தடங்களும் இருந்தன. அவை யாருடையவை என்பதுகூட தெரியவில்லை. தாக்குதலுக்குள்ளான மாணவி மட்டுமின்றி மற்றொரு மாணவிக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது” என்று அதிர்ச்சியுடன் விவரித்துள்ளார்.


தாக்குதல் நடத்திய இளைஞர் கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 21 வயதான ஹேமந்த் என்ற இளைஞரை அடையாளம் கண்டனர். ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் தர்மாவரம் அருகே உள்ள நாகலூர் கிராமத்தைச் சேர்ந்த ஹேமந்த், தாக்குதலுக்குள்ளான மாணவியின் தூரத்து உறவினர் என்று கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு தப்பிச் சென்ற ஹேமந்தைத் தர்மாவரம் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவியை ஹேமந்த் தொடர்ந்து தொந்தரவு செய்து அவரது காதலை மாணவி ஏற்க வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் தமது பெற்றோரிடம் புகார் தெரிவிக்கப் போவதாக மாணவி எச்சரித்ததால் ஆத்திரமடைந்த ஹேமந்த் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் தாயாரிடம் பேசிய சந்திரபாபு நாயுடு
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். மாணவியின் உயிரைக் காப்பாற்றத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேல்சிகிச்சைக்காக மாணவியை பெங்களூருக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துணை முதல்வர் பவன் கல்யாண், கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோரும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.









