இளைஞரை மிரட்டிய கால்நடை மருத்துவர் பணியிடை நீக்கம் – மன்னிப்பு கோரிய அமைச்சர்!

By Pandeeswari Gurusamy

|

Published on 31 Oct 2026, 4:39 PM

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சதாசிவம். இவரது மகன் சந்துரு. இவர் தங்களது வீட்டில் வளர்த்து வந்த பசு மாட்டை சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு பணியில் இருந்த கால்நடை மருத்துவர் சங்கரநாராயணன், பசு மாட்டைப் பரிசோதித்த பிறகு சிகிச்சை அளித்துள்ளார். சிகிச்சை முடிந்ததும், “நாளை எத்தனை மணிக்கு பசு மாட்டை சிகிச்சைக்கு அழைத்து வர வேண்டும்?” என்று சந்துரு மருத்துவரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் சங்கரநாராயணன், சந்துருவை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

ADVERTISEMENT

“உன் 209 எலும்புகளையும் உடைத்துவிடுவேன்; உடம்பு மட்டும்தான் இருக்கும், தலை இருக்காது; அறுத்துவிடுவேன், ராஸ்கல்! உனக்கும் எனக்கும் 5 லட்சம் படிகள் வித்தியாசம்; நீ 5-ம் வகுப்பு, நான் 50-ம் வகுப்பு படித்தவன்; என் படிப்பைப் படிக்க உனக்கு 2,000 ஜென்மம் வேண்டும்; சிங்கம் புலி கரடி 5 தலை நாகத்திற்கும் இதுதான் ஆஸ்பத்திரி. உன்னை எவன் அனுப்பினானோ அவனிடம் போய் சொல்லு. 210 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சப்போர்ட்டில் நான் இங்கு இருக்கிறேன்” என்று கூறி அவரை மிரட்டியுள்ளார். மேலும், தன்னை வீடியோ எடுக்கக் கூடாது என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, பல தரப்பினரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சந்துரு மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இதற்கிடையில், சிகிச்சைக்கு வந்த இளைஞரைத் தகாத வார்த்தைகளால் பேசிய கால்நடை மருத்துவர் சங்கரநாராயணன் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி கூறுகையில், “அவர் பேசியது தவறு.. மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளேன். துறை சார்ந்த அமைச்சர் என்ற முறையில் இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel