Inky Pinky Ponky போட்டுத் தப்பிச் செல்லும் கைதிகள்.. விஜய் அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்

By Pandeeswari Gurusamy

|

Published on 31 Oct 2026, 1:52 PM

Vijay

தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய பரபரப்பு அடங்குவதற்குள் கோவை சிறை வளாகத்தில் இருந்து கைதி ராகவன் தப்பி ஓடிய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.

ADVERTISEMENT

அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.

தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார்.

ADVERTISEMENT

மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.

இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

‘மெத்’ அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என தெரவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில்,”கோவை சிறைச்சாலையில் இருந்து ராகவன் என்ற விசாரணைக் கைதி தப்பி ஓடியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இதுவரை கேள்விப்படாத கொடுமையாக சிறைக் கைதிகள் இந்த ஆட்சியில் தப்பித்துச் செல்வது , சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதை ஆகி உள்ளது.

“வெற்றி ஆட்சி சாதனை மலரில்” சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் கடத்தல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, கடன்கள் வரிசையில் இதுவும் முக்கிய தலைப்பாக வைக்கலாம்.

தேனி, புழல், சேலம் என ஒவ்வொரு முறை சிறைக்கைதிகள் தப்பி ஓடும் போதும் ஒரு ஒரு செய்தி வருகிறது, “சிறைத் துறை பாதுகாப்பை பலப்படுத்துகிறோம்”, “கண்காணிப்பு கோபுரங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்களை நிற்க வைக்கிறோம்” என்றெல்லாம்.

இன்று கூட “சிறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்; இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என முதல்வர் செய்தி வெளியிட்ட சில மணித் துளிகளில் கோவை சிறையில் கைதி தப்பியோடிய கேவலம் அரங்கேறியுள்ளது.

மொத்தத்தில், இந்த ஆட்சியின் கோமாளித்தனங்களை குறிப்பிட வேண்டும் என்றால், “வாய் மட்டும் தான் வேலை செய்யுது, மத்தது எல்லாம் அப்படியே இருக்கு” என்ற விஜய் நடித்த போக்கிரி படத்தில் வரும் நகைச்சுவை தான் பொருத்தமாக இருக்கும்.

அது எப்படி கைதிகளால் , சிறையில் இருந்து இவ்வளவு எளிதாக தப்பிக்க முடிகிறது?

இது போன்ற கடுங்குற்றவாளிகள் , தப்பித்துச் சென்று என்ன என்ன குற்றங்களை செய்வார்கள் என நினைத்தாலே பதறுகிறது,

சிறைச்சாலையை கூட பாதுக்காப்பாக வைக்க முடியவில்லை என்றால் எப்படி
இந்த ஆட்சி தங்களைக் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும்?

அறிக்கை மூலம் அதிகாரிகளை முழு கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் தங்களது பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படக்கூடாது என்று அறிவுருத்தும் தவெக கூட்டணி அரசின் முதல்வர் ஜோசப் விஜய் எப்போது தனது அறிக்கையில் கூறியுள்ளவாறு தனது முதல்வர் பணிகளை மேற்கொள்ளப்போகிறார்?” என தெரிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில், “கோவை மத்திய சிறையில் இருந்து நேற்று இரவு ராகவன் என்ற கைதி தப்பியோடிய செய்தியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தேனியில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவமும், அதற்கு முன்பாக புழல் சிறையில் இருந்து இரு கைதிகள் தப்பியோடிய சம்பவத்தினைத் தொடர்ந்து தற்போது கோவை மத்திய சிறையிலும் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு பாதுகாப்பினையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

சிறைத்துறை டிஜிபி-யை மாற்றம் செய்தால் மட்டும் இதுபோன்ற அஜாக்கிரதையான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட முடியுமா? கைதிகளை நல்வழிப்படுத்தும் சிறைகள் எந்த அளவிற்கு அவர்கள் பாதுகாப்பில் கோட்டை விடுகின்றன என்பதற்கு உதாரணமாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருப்பது உண்மையாகவே சிறைச் சாலைகள் உச்சகட்ட பாதுகாப்புடன் தான் செயல்பட்டு வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஒரு துறையைச் சார்ந்த அமைச்சர்களே தங்கள் துறையில் திணறிக் கொண்டிருக்கும் போது எரிசக்தி, மின்சாரம், சட்டம், சிறைத்துறை, ஊழல் தடுப்புத்துறை என இத்தனை துறைகளை பொறுப்பில் வைத்துக் கொண்டு அனைத்திலும் தோல்வி கண்டுவிட்டு அதனைச் சமாளிக்கும் விதமாக தினந்தோறும் பேட்டிகளைக் கொடுக்க மட்டும் அமைச்சர் நிர்மல் குமார் தவறுவதில்லை. இதற்கும் என்ன பதில் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.
குற்றவாளிகளை சுதந்திரமாக வெளியில் உலவவிட்டு வேடிக்கை பார்த்து சட்டம் ஒழுங்கை காக்க தொடர்ந்து தவறிவரும் தவெக அரசை தூய சக்தியா இல்லை தீயசக்தியா என்பதை மக்கள் விரைவில் முடிவு செய்வார்கள்.” என தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel