சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமார் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு லஞ்சம் பெறப்பட்டதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த ஊழல் வழக்கில் சீரியல் நடிகைகளான ஜனனி அசோக்கமார், ஷபானா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
இந்த நிலையில் நடிகை ஜனனி தனது இன்ஸ்டா பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
அதில், கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி உலா வரும் 634 கோடி ரூபாய் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
நான் எப்போதும் எந்த அரசியல் கட்சியினுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. எந்த அரசியல்வாதியுடனும் தனிப்பட்ட நட்பை பாராட்டவில்லை.

உண்மை தெரியாமல் ஆதாரம் இல்லாமல் தீவிரமான குற்றச்சாட்டுகளை பரப்புவது மற்றும் ஒரு நபரிடம் விளக்கம் கேட்காமல் செய்தி வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம்.
நான் மிகுந்த சிரமப்பட்டு யாருடைய ஆதரவும் இன்றி எனது சொந்த முயற்சியில் சுயமரியாதையுடன் இந்த துறையில் உழைத்து முன்னுக்கு வந்திருக்கிறேன்.
ஊடகங்களும் இணைய பயனர்களும் எதையும் வெளியிடும் அல்லது பகிர்வதற்கு முன் உண்மையை சரி பார்க்க வேண்டும். என் மீதான தவறான பதிவுகளை நீக்க வேண்டும்.
இந்த கடினமான காலகட்டத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்டத் தொடர்களிலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’செம்பருத்தி’ தொடரிலும் நடித்து சின்னத்திரையில் பிரபலமானவர். ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் போலீஸ் போலீஸ் இணையத் தொடரில் ஜனனி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.









