தேனி கைதிகள் தப்பிய விவகாரம்: துணை சிறை அலுவலர் சஸ்பெண்ட்!

By Mathi

|

Published on 31 Oct 2026, 9:25 AM

Theni-Officer Suspend

தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரத்தில், சிறையின் பொறுப்பு கண்காணிப்பாளராக இருந்த துணை சிறை அலுவலர் நாகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டச் சிறையில் 26.10.2026 அன்று இரவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.

ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு, தப்பிச் சென்ற 17 கைதிகளையும் மீண்டும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள், கண்காணிப்புப் பணிகளில் நிலவிய மெத்தனப்போக்கு மற்றும் பணியில் ஏற்பட்ட கவனக்குறைவு ஆகியவை குறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

அதன்படி, தேனி மாவட்டச் சிறையில் 06.08.2024 முதல் சிறைக் கண்காணிப்பாளர் பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வந்த துணைச் சிறை அலுவலர் ந. நாகேஸ்வரன், சிறைக் கைதிகள் மற்றும் பணியாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளில் உரிய கவனம் செலுத்தத் தவறியதற்காக, தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி, 30.10.2026 முதல் மறு உத்தரவு வரும் வரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சிறை நிர்வாகத்தில் கண்காணிப்பு, பொறுப்புடைமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், மதுரை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் . கிருஷ்ணராஜ், சேலம் மத்தியச் சிறைக் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

சிறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படாத வகையில், சிறைத் துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புகளை முழு கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் மேற்கொள்ள வேண்டும் என்றும், பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைத் துறை டிஜிபி மாற்றம்

தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக ஏற்கெனவே 9 சிறைத்துறை பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தப்பிய 17 கைதிகளும் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், அக். 29-ந் தேதி சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மின்வாரிய தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக கே. சங்கர் சிறைத்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சிறை அதிகாரிகள் மீதான நடவடிக்கையை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel