மழைக்காலத்தில் வெளியே போய்வந்தால் ஷூவும் செருப்பும் நனைவது சகஜம்தான். ஆனால் மறுநாள் காலையில் அவசரமாகக் கிளம்பும்போது ஷூ ஈரமாகவே இருந்து, நாற்றமும் அடித்தால் எரிச்சல்தான். இதற்காகப் புது ஷூ வாங்க வேண்டியதில்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே ஈரத்தையும் நாற்றத்தையும் கட்டுப்படுத்தலாம்.
செய்தித்தாளை வைத்து ஈரத்தை உறிஞ்சுங்கள்
மழையில் நனைந்த ஷூவை வீட்டுக்கு வந்ததும் கழற்றி, வெளிப்புறத்தில் இருக்கும் தண்ணீரைக் காய்ந்த துணியால் துடைத்துவிடுங்கள். உள்ளே இருக்கும் இன்சோலைத் தனியாக எடுக்க முடிந்தால் எடுத்துக் காயவையுங்கள். பழைய செய்தித்தாளைக் கசக்கி உருண்டையாக்கி ஷூவுக்குள் வையுங்கள். அது உள்ளே இருக்கும் ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளும். காகிதம் நனைந்துவிட்டால் மாற்றி வையுங்கள். கடைகளில் கிடைக்கும் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளையும் ஈரத்தைக் குறைக்கப் பயன்படுத்தலாம்.
பேக்கிங் சோடா செய்யும் உதவி
ஷூ ஓரளவு காய்ந்த பிறகும் நாற்றம் போகவில்லை என்றால் பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம். கொஞ்சம் பேக்கிங் சோடாவைச் சின்னத் துணிப் பையிலோ காகிதப் பொட்டலத்திலோ போட்டு, இரவு முழுக்க ஷூவுக்குள் வையுங்கள். காலையில் எடுத்துவிடலாம். இதனால் நாற்றம் குறையும். ஆனால் எல்லா வகையான பூஞ்சை, பாக்டீரியா தொற்றுகளையும் பேக்கிங் சோடா அழித்துவிடும் என்று நினைத்துவிடாதீர்கள்.
வெயில் இல்லாவிட்டாலும் காயவைக்கலாம்
மழைக்காலத்தில் வெயில் வராவிட்டால், நல்ல காற்றோட்டமான இடத்தில் ஃபேனுக்குக் கீழே ஷூவை வைத்துக் காயவைக்கலாம். ஹேர் டிரையர் போன்ற அதிக சூடு தரும் கருவிகளைப் பயன்படுத்தினால் சில ஷூக்களின் பசை, வடிவம், மேல்பகுதி எல்லாம் பாழாகிவிடலாம். தோல் ஷூக்களைக் கடும் வெயிலில் நேரடியாக வைப்பதையும் தவிர்ப்பது நல்லது.
நாற்றம் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
ஷூ முழுசாகக் காய்ந்த பிறகுதான் மறுபடி போட வேண்டும். போட்டுக் கழற்றிய ஷூவை ஈரமான இடத்தில் அடைத்து வைக்காமல், காற்றோட்டமான இடத்தில் வையுங்கள். தொடர்ந்து நாற்றம் அடித்தால், இன்சோலைச் சுத்தம் செய்வதோடு, கால்களையும் நன்றாகக் கழுவி, ஈரம் போகத் துடைத்துவிட வேண்டும்.
கால்களில் அரிப்பு, தோல் உரிவது, எப்போதும் நாற்றம் அடிப்பது போன்ற பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.









