சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) பேராசிரியர் கலையரசனை அதிகாலையில் அவரது வீட்டிலிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றதற்கு அந்நிறுவனத்தின் பேராசிரியர்கள் 17 பேர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் 17 பேராசிரியர்கள் இன்று (அக்டோபர் 30) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் (Statement of Solidarity) கூறியிருப்பதாவது:
பேராசிரியர் டாக்டர் கலையரசனின் சக பணியாளர்களாகிய நாங்களும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆசிரியர்களும், கல்விசார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், தவறான தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறையினர் டாக்டர் கலையரசனை துன்புறுத்தியதை கடுமையாகக் கண்டிக்கிறோம்.
எந்தவிதமான சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல், அதிகாலை நேரத்தில் அவரது வீட்டிலிருந்து அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்றது அதிர்ச்சியளிக்கிறது. எந்தவொரு குடிமகனுக்கு எதிராகவும் இத்தகைய தன்னிச்சையான, சட்டத்துக்குப் புறம்பான காவல்துறையின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது.
அதிலும், தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் முன்னணி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக விளங்கும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் மீது இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்றும் நிறுவனம்
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், மாநில அரசுடன் நெருக்கமாக இணைந்து பல்வேறு முக்கியமான கொள்கை ஆய்வுகள், மதிப்பீட்டுப் பணிகள் மற்றும் அரசு ஊழியர்களின் திறன் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது. தற்போதும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
முதலமைச்சர் வருத்தம் தெரிவித்தது ஆறுதல்
முதலமைச்சர் விஜய், டாக்டர் கலையரசனைச் சந்தித்து, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்திருப்பது ஆறுதலளிக்கிறது. டாக்டர் கலையரசனுக்கு எங்களது ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும், கல்விச் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ள பேராசிரியர்கள்:
- பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி (Venkatachalapathy A R)
- பேராசிரியர் மு. விஜயபாஸ்கர் (M. Vijayabaskar)
- உதவிப் பேராசிரியர் கே. ஜாபர் (K. Jafar)
- உதவிப் பேராசிரியர் எம். உமாநாத் (M. Umanath)
- உதவிப் பேராசிரியர் கே. ஹஃப்சல் (K. Hafsal)
- உதவிப் பேராசிரியர் பிரஜ்வல் நாகேஷ் (Prajwal Nagesh)
- உதவிப் பேராசிரியர் எஸ். நெல்சன் மண்டேலா (Nelson Mandela S)
- உதவிப் பேராசிரியர் மோனலிசா சக்ரவர்த்தி (Monalisha Chakraborty)
- உதவிப் பேராசிரியர் ஸ்மிருதி பாலா கண்ணன் (Smruthi Bala Kannan)
- உதவிப் பேராசிரியர் ரிடா வான்பா நோங்ப்ரி (Rida Wanbha Nongbri)
- முன்னாள் பேராசிரியர் மற்றும் இயக்குநர் பத்மினி சுவாமிநாதன் (Padmini Swaminathan)
- முன்னாள் பேராசிரியர் எஸ். ஆனந்தி (S. Anandhi)
- முன்னாள் பேராசிரியர் கிருபா அனந்த்பூர் (Kripa Ananthpur)
- முன்னாள் பேராசிரியர் அஜித் மேனன் (Ajit Menon)
- முன்னாள் பேராசிரியர் எல். வெங்கடாசலம் (L. Venkatachalam)
- முன்னாள் பேராசிரியர் சி. லட்சுமணன் (C. Lakshmanan)
- முன்னாள் பேராசிரியர் கரேன் கோயல்ஹோ (Karen Coelho









