தமிழக பொருளாதார நிலைமை மோசம் என விமர்சித்ததால் பேரா. கலையரசனை கைது செய்வதா? குவியும் கண்டனங்கள்

Published On:

| By Mathi

Kalaiyarasan Issue-DK

தமிழக பொருளாதார நிலைமை மோசம் என விமர்சித்ததால் பேரா. கலையரசனை கைது செய்வதா? என முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றி கழக ஆட்சிக்கு திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி, திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க. ராசேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: சிறந்த பொருளாதார ஆய்வாளரும், பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நிகழ்த்துபவரும், எம்.அய்.டி.எஸ். பேராசிரியரும், நூற்றாண்டு திராவிட இயக்கம் உருவாக்கிய பொருளாதாரக் கட்டமைப்பை ஆய்வு செய்து, மறுக்க முடியாத சான்றுகளுடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ‘The Dravidian Model: Interpreting the Political Economy of Tamil Nadu’ (திராவிட மாடல்: தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதாரத்தை விளக்குதல்) என்ற புத்தகம் எழுதியவர்களில் ஒருவருமான முனைவர் ஆ.கலையரசன், நேற்று (28.10.2026) அதிகாலை 5 மணியளவில் தமிழ்நாடு காவல்துறையால் அத்துமீறி கைது செய்யப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது – கடும் கண்டனத்திற்குரியது.

ADVERTISEMENT

‘‘கலையரசன் தனது இன்ஸ்டா கணக்கில், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் குறித்து அவதூறாக பதிவிட்டார்’’ என்று காரணம் கூறி, சீருடை இன்றி மப்டியில் வாடகைக் காரில் வந்த காவல்துறையினர், பேராசிரியர் ஆ.கலையரசன் அவர்களை உடை மாற்றக்கூட அனுமதிக்காமல், மொபைல் போனைப் பறித்துக் கொண்டு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். விசாரணை என்ற பெயரால் மிரட்டி அலைக்கழிக்கப்பட்டு, மூன்று மணி நேரம் கழித்து வீட்டிலேயே இறக்கி விடப்பட்டுள்ளார்.

அவசர வழக்கா? கொடுங் குற்றச்சாட்டா?

ஆனால், கலையரசன் அவர்களுக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே கிடையாது. அவர் மீது சந்தேகம் இருக்குமானால், அழைத்து விசாரிக்கலாம். சீருடை அணியாத காவலர்களை வாடகைக் காரில் அனுப்பி கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அப்படி அவசரமான வழக்கா, அல்லது கொடுங் குற்றச்சாட்டா இது?

ADVERTISEMENT

இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் கீழ் இயங்கும் தேசிய மனிதவள பொருளாதார ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (NILERD) பணியாற்றியவர். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் (King’s College London) வருகைதரு ஆராய்ச்சியாளராகவும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் லக்ஷ்மி மிட்டல் தெற்காசிய மய்யத்தில் ஆய்வாளராகவும் இணைந்து செயலாற்றியவர்.

ஜாதி மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் பொருளாதார அமைப்புகளில் ஏற்படுத்தும் தாக்கங்கள், சார்ந்த வளர்ச்சி (Regional Development), அரசியல் பொருளாதாரம், வேலைவாய்ப்புச் சந்தை குறித்த ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். இந்தியா, அமெரிக்காவில் நிலவும் ஜாதி, இன ரீதியான சமூகக் கட்டமைப்பு வேறுபாடுகளை ஒப்பிடும் பன்னாட்டு ஆய்வுத் திட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.

ADVERTISEMENT

திட்டமிட்டுதான் கைது

தமிழ்நாட்டின் தனித்துவமான வளர்ச்சிப் பாதையையும், சமூக நீதியையும் தரவுகளுடன் உலக அரங்கிற்கு எடுத்துரைக்கும் முன்னணி இளம் பொருளாதார அறிஞர்களில் பேராசிரியர் கலையரசன் மிக முக்கியமானவர். ‘தி இந்து’, ‘ஃப்ரண்ட்லைன்’, ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி’ (EPW) போன்ற இந்திய, பன்னாட்டு நாளிதழ்கள், ஆய்விதழ்களில், பொருளாதார வளர்ச்சி சார்ந்த பல கட்டுரைகளை எழுதி வருபவர். அப்படிப்பட்ட சிறப்புக்குரியவர், தமிழ்நாட்டு அரசாலும், மக்களாலும் கொண்டாடப்பட வேண்டிய அறிவாளரை, பொய் வழக்கைக் காரணம் காட்டித் திட்டமிட்டுக் கைது செய்துள்ளது த.வெ.க.அரசு.

இந்தக் கைதின் பின்னணி, இன்ஸ்டா வழக்கு அல்ல. அண்மையில் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், ‘‘வரலாறு காணாத அளவுக்குத் தற்போதைய ஆட்சியில் தமிழ்நாட்டில் விலைவாசி உயர்ந்திருக்கிறது’’ என்கிற உண்மையை உடைத்துச் சொன்னார் என்பதுதான் காரணம்.
இதற்கு முன்பு, த.வெ.க. அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தமிழ்நாட்டின் கடன் அளவைக் காட்டிலும் மாநில அரசின் சொந்த வருவாய் ஈட்டும் திறன் குறைந்து வருவதே முதன்மையான சவால்’ என்று சுட்டிக்காட்டினார்.

விமர்சித்தால் கைதா?

ஜிஎஸ்டி (GST) அமலாக்கம், முத்திரைத்தாள் கட்டண வருவாய் சரிவு மற்றும் ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வு அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றால் தமிழ்நாட்டின் பாரம்பரிய பொருளாதாரக் கட்டமைப்பு சவாலைச் சந்திப்பதாகக் குறிப்பிட்டார். ‘‘கூட்டுறவு அமைப்புகள், பொது விநியோகத் திட்டம் மூலமாக அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம். இடைத்தரகர்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்தலாம். அதற்கான உரிமைகள் மாநில அரசுக்கு உண்டு. இவற்றைச் செய்தால் விலைவாசி உயர்வு மட்டுப்படும்!’’ என்று ஆலோசனை சொன்னார் என்ற காரணத்திற்காக, அவரை மிரட்டும் நோக்கில் இந்தக் கைது அரங்கேற்றப்பட்டுள்ளது.

ஆட்சியின் மீதான உண்மையான விமர்சனத்தையும், மக்கள் மீதான அக்கறையில் அவர் வழங்கிய அறிவுரையையும் ஏற்கும் பக்குவமில்லாமல், மாற்றுக்கருத்துச் சொல்வோரை மிரட்டுவதும், கைது செய்வதும் இந்த த.வெ.க. அரசில் தொடர்ந்து வருகிறது. முன்பு ஊடகவியலாளர் விஜயன் கைது செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர்கள், நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இப்போது ஒரு பொருளாதாரப் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அசல் பாசிசம்

இதற்குப் பேர் பாயசம் அல்ல; இதுதான் ‘அசல் பாசிசம்’. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்யும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் அடாவடித்தனம்! அனுபவம் இல்லாவிட்டாலும் துறை சார்ந்த அறிஞர்களின் அறிவுரையைப் பெற்று ஆட்சி செய்யலாம் என்று நேற்று (28.10.2026) தான் த.வெ.க. அரசுக்கு அறிக்கை மூலம் சுட்டிக்காட்டினோம். ஆனால், ஆலோசனை கூறத் தக்கவர்களையே, மப்டி போலீசை அனுப்பி, அதிகாலை நேரத்தில், உடையை மாற்றக் கூட அனுமதிக்காமல் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அதிகார மமதை கொண்டிருப்பது இந்த அரசுக்கு நல்லதல்ல! இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

விடுதலை க. ராசேந்திரன் வெளியிட்ட அறிக்கை: சென்னை எம்ஐடிஎஸ் நிறுவனத்தின் இணை பேராசிரியரான முனைவர் கலையரசன் அவர்களை தமிழ்நாடு அரசின் காவல்துறை மிக இழிவாக நடத்தி இருப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை. காவல் துறையின் நடவடிக்கைகள் மிக மோசமான அளவுக்கு எல்லை மீறிக் கொண்டிருக்கின்றன.

இரவு உடையிலேயே இழுத்துச் சென்ற காவல்துறையினர்

அடையாறில் உள்ள தனது வீட்டில் அவர் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று சீருடை அணியாத காவல்துறையினர் கதவை தட்டி அவரை எழுப்பி அவரிடம் இருந்த அலைபேசியை பிடுங்கி வெளியே வாடகை காரில் இழுத்துக் கொண்டு போய் பம்மல் காவல் நிலையம் நோக்கி சென்று இருக்கின்றனர். இப்படி காவல்துறை இழுத்துக் கொண்டு போவதற்கு அவர்களிடம் எந்த ஆவணமும் இல்லை.

உடை மாற்றவும் அனுமதிக்காமல் இரவு உடையிலேயே அவரை இழுத்துச் சென்றுள்ளார்கள். போகும் வழியிலேயே குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க செல்போனை கேட்டபோது காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

வழியில் பல்லாவரத்தில் சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு 45 நிமிடம்தொடர்ந்து வந்து கொண்டிருந்த அலைபேசி அழைப்புகளுக்கு காவல்துறையினர்பதில் கூறிக் கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு பம்மல் காவல் நிலையத்திற்கு போகாமல் அடையார் இல்லம் நோக்கி கார் திரும்பியது.

போலி இன்ஸ்டாகிராம் பதிவு

அப்போதுதான் பல்லாவரம் தவெக சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி குறித்து இன்ஸ்டாகிராமில் அவதூறாக பதிவிட்டதாக ஒரு பதிவை காட்டியுள்ளார்கள். அந்த பதிவில் ப்ரோபைல் படமாக கலையரசன் படத்தை வைத்து யாரோ ஒரு போலி நபர் இதை எழுதியிருக்கிறார் என்பது தெரிய வந்தது. அவருக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கே இல்லை. மோசடியாக அவரது படத்தை பயன்படுத்தி இந்த அவதூறு எழுதப்பட்டிருக்கிறது.

இந்தப் பதிவு உண்மைதானா என்பதை விசாரிக்காமல் அவசர அவசரமாக முனைவர் கலையரசனை இப்படி கிரிமினல் போல் அலைகழித்து ஏன் அவமதிக்க வேண்டும்?

தமிழ்நாடு அரசை விமர்சிக்கக் கூடாதா?

தமிழ்நாட்டின் பொருளாதார நிலை மோசமாக இருக்கிறது என்று ஆய்வு பூர்வமாக அவர் எழுதியது தான் இதற்கு காரணம். தமிழ்நாடு அரசை ஆய்வு பூர்வமாக கூட விமர்சிக்கக் கூடாது என்று மிரட்டுவதே இதன் நோக்கமாக தெரிகிறது.

பிரம்மாவின் தலையில் பிறக்காமல் விளிம்பு நிலை சமூகத்தில் இருந்து உயர்ந்து இன்று உலகம் போற்றும் பொருளாதார அறிஞராக வளர்ந்து நிற்கும் ஒரு ஆய்வாளருக்குஇத்தகைய அவமானத்தை இந்த ஆட்சியின் காவல்துறை இழைக்கிறது என்பது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரும் அவமானம்.

திராவிடன் மாடல் நூலை எழுதிய கலையரசன்

உலக அளவில் அவரது ஆய்வுகளும் கட்டுரைகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. முனைவர் கலையரசனும் முனைவர் விஜயபாஸ்கரும் இணைந்து எழுதிய நூல்தான் “திராவிடன் மாடல் “எனும்மிகச் சிறந்த ஆங்கில ஆய்வு நூல்.

திராவிடன் மாடல் என்ற சொற்றொடரை தமிழக அரசியல் களத்துக்கு வழங்கியது இந்த நூல்தான். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இந்த நூலை வெளியிட்டது. சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் ஒன்றிய அரசின் நிதி ஆயோக்கிலும் பங்களிப்புகளை வழங்கியவர் முனைவர் கலையரசன்.

காவல்துறை இயக்குனருக்கு கடிதம்

தமிழக காவல்துறை ரசிகர் மன்ற மனப்பான்மையில் செயல்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது. கிரிமினல் போல் நடத்தி அவமானப்படுத்தியதை விளக்கி முனைவர் கலையரசன் காவல்துறை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார். அத்துமீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். நடவடிக்கை எடுப்பார்களா? இவ்வாறு விடுதலை க. ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share