காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய் என திமுகவை எதிர்ப்பவர்கள்தான் மாறுகிறார்களே தவிர திமுக என்றைக்குமே நிலையாக நிற்கும் என கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் இன்று நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்த முறையும் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை அதிக இடங்களில் சோதனை செய்துள்ளார்கள்.
என் சகோதரர் மணிவண்ணன் பிஸினஸ் ரீதியாக வைத்துள்ள 2 லேப்டாப்புகளை எடுத்துச் சென்றுள்ளார்கள். சட்டம் – ஒழுங்கு சீர்கெடுகள், தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பித்தது உள்ளிட்டவற்றை திசை திருப்பவே இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம். இது குறித்து எங்கள் கட்சித் தலைவர் கூறியது சரிதான்.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை மையப்படுத்தி தான் இந்த சோதனை என நான் நினைக்கவில்லை. நாங்கள் இருந்தால் திமுக வெற்றி பெறும் இல்லையென்றால் தோல்வி அடையும் என்பது அல்ல. மக்கள் தான் முடிவெடுத்து வெற்றி பெற வைப்பார்கள். எங்கள் கட்சி தலைவர் கூறுவதை தட்டாமல் செய்வது தான் எங்களுடைய வேலை. நான் மட்டும் திமுக இல்லை எங்களிடம் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள் நான் இல்லை என்றாலும் எங்களுடைய தொண்டர்கள் பணியாற்றி திமுகவை தேர்தலில் வெற்றி பெற வைப்பார்கள்
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசை கைது செய்துள்ளார்கள். இன்று என் வீட்டில் சோதனை செய்ய வந்துள்ளார்கள் திசை திருப்பத்தான் இதை செய்கிறார்கள்.
திமுக ஆட்சியில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்தார்கள். அதனைத் தொடர்ந்து அரசுக்கு வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தினார்கள் திமுக ஆட்சி கலைந்த பின்பு தற்போது த.வெ.க ஆட்சியில் வழக்கு பதிவு செய்து சோதனை செய்கிறார்கள். இது எனக்கு மட்டும்தான். அன்பில் மகேஷ் விவகாரத்தில் புதிதாக தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை என் வீட்டில் சோதனை செய்தார்கள்.
சோதனை,கைது உள்ளிட்டவற்றை ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சி காலத்தில் திமுக எப்படி எதிர்கொண்டதோ அதேபோல இந்த ஆட்சியிலும் எதிர்கொள்வோம். ஜெயலலிதா எல்லா அமைச்சர்கள் மீதும் நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்தார்கள் அதை நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்று வந்துள்ளோம். அதேபோல நீதிமன்றத்தை நாங்கள் நாடுவோம்.
உயர்நீதிமன்றம் இந்த லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்ய நாங்கள் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளார்கள். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாங்கள் மேல்முறையீடு செய்துள்ளோம்.
திமுகவைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி குறித்து கவலைப்படுவது இல்லை. தாராபுரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்து இடைத்தேர்தலில் இரண்டாவது இடத்திற்கு வந்தோம், அதே போல மதுராந்தகத்திலும் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளோம். ஆளுங்கட்சியின் வெற்றி வித்தியாசம் குறைந்துள்ளது. நாங்கள் தேர்தலை சந்திக்கும் போதே நம்பிக்கையாக சந்திக்கிறோம். திரைத்துறையில் இருந்து யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும்.
காங்கிரஸ் Vs திமுக, எம்ஜிஆர் Vs திமுக, ஜெயலலிதா Vs திமுக, விஜய் Vs திமுக என எங்களை எதிர்ப்பவர்கள்தான் மாறுகிறார்களே தவிர திமுக என்றுமே நிலைத்திருக்கும். திமுகவை எதிர்ப்பவர்கள் வேண்டுமானாலும் மாறலாம் ஆனால் திமுக என்றைக்குமே நிலையாக நிற்கும்.
சோதனையை தொடர்ந்து கைது இருக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,”யூகத்திற்கு எந்த பதிலும் கூற முடியாது” என்றார்.
