கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி கைது!

Published On:

| By Pandeeswari Gurusamy

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி கிரிஸ்டோபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த தனது தோழியுடன் சில தினங்களுக்கு முன் நாகர்கோவிலில் உள்ள கல்லூரிக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்புவதற்காகக் கொட்டும் மழையில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.

ADVERTISEMENT

அப்போது அந்த வழியாகக் காரில் வந்த மருந்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் குமரி மத்திய மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிரிஸ்டோபர், மாணவிகளுக்கு லிப்ட் தருவதாகக் கூறியுள்ளார். தக்கலை மாணவிக்குக் கிரிஸ்டோபர் ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால், இரண்டு மாணவிகளும் காரில் ஏறியுள்ளனர்.

தக்கலை பகுதியில் ஒரு மாணவி இறங்கிய பிறகு, குலசேகரத்தைச் சேர்ந்த மாணவியை அவரது வீட்டில் விடுவதாகக் கிரிஸ்டோபர் கூறியுள்ளார். இதை நம்பித் தக்கலை மாணவியும் தோழியை அவரோடு அனுப்பி வைத்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில், தக்கலை அருகே மருந்துக்கோட்டை பகுதியைக் கார் கடந்து செல்லும்போது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை ஓரமாக நிறுத்திய கிரிஸ்டோபர், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி கூச்சலிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அம்மாணவி தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் தக்கலை காவல்துறையினர் தவெக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், தலைமறைவாக இருந்த தவெக நிர்வாகி கிரிஸ்டோபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share