தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரணடைய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு இன்று (அக்.29) விசாரணைக்கு வரும் நிலையில், முத்துக்குமார் சரணடைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காகப் பள்ளி நிர்வாகங்களிடம் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், அவரது நண்பரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 26-ந் தேதி அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் வழக்கில் 2-வது குற்றம்சாட்டப்ப நபரான (A2) முத்துக்குமார் தலைமறைவாக இருந்து வருகிறார்.
நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், முத்துக்குமார் தலைமறைவாக இருப்பது அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவரை சரணடைய வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது; ஆனால் முத்துக்குமாரை யாராலும் தொடர்புகொள்ள முடியவில்லை; வழக்கமாகத் தனது தாயாரிடம் பேசும் அவர், தற்போது குடும்பத்தினருடனான தொடர்பையும் துண்டித்துவிட்டதாகவும் பதிவு செய்திருந்தோம்.
இந்நிலையில் முத்துக்குமாரை அன்பில் மகேஷ் தரப்பு தொடர்பு கொண்டு பேசியதாகவும் இதனையடுத்து இன்று நீதிமன்றத்தில் முத்துக்குமார் சரணடைய இருப்பதாகவும் நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
