சட்டவிரோதமாக தடுத்து வைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபிக்கு பேரா. கலையரசன் கடிதம்

Published On:

| By Mathi

Kalaiyarasan-Police -DGP

தனது போட்டோவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் தவெக எம்.எல்.ஏ. காமாட்சி குறித்து அவதூறான கருத்து பதிவிடப்பட்டதாகக் கூறி, அதிகாலையில் வீட்டுக்கு வந்து தன்னை சட்டவிரோதமாக அழைத்துச் சென்று தடுத்து வைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் அ. கலையரசன், தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக டிஜிபிக்கு பேராசிரியர் கலையரசன் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: எனது பெயர் அ. கலையரசன். சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தில் (MIDS) பொருளாதாரத் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். எனக்கு நடந்த சம்பவம் தொடர்பாகத் தங்களிடம் புகார் அளிக்கிறேன்.

ADVERTISEMENT

நான் பொருளாதார நிபுணர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்ட The Dravidian Model என்ற நூல் உட்பட, சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஆய்வு நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன்.

இந்தியத் திட்டக் குழு (தற்போதைய நிதி ஆயோக்), டெல்லியில் உள்ள தொழில் வளர்ச்சி ஆய்வு நிறுவனம் (ISID), லண்டன் கிங்ஸ் கல்லூரி, பிரவுன் பல்கலைக்கழகம், மும்பை ஐஐடி, இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளேன்.

ADVERTISEMENT

இந்தியா, குறிப்பாகத் தமிழகத்தின் வளர்ச்சிக்கான திராவிட மாடல் குறித்த பொருளாதார, அரசியல் விவகாரங்களில் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உரையாற்றியுள்ளேன்.

தமிழக அரசின் தொழில் கொள்கை மற்றும் தொழிலாளர் சந்தை தொடர்பான பொருளாதார ஆய்வுக்கும் பங்களித்துள்ளேன். தி இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறேன்.

ADVERTISEMENT

அக்டோபர் 28 அதிகாலை சுமார் 5 மணியளவில், சென்னை அடையாறு நேரு நகரில் உள்ள எனது வீட்டின் கதவைச் சாதாரண உடையில் வந்த 3 போலீசார் தட்டினர். அப்போது நான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தேன்.

கதவைத் திறந்ததும் எனது பெயரைக் கேட்டனர். நான் எனது பெயரைச் சொன்னவுடன் செல்போனைப் பறித்துக்கொண்டனர்.

சமூக வலைதள பதிவு தொடர்பாக விசாரிக்க பம்மலில் உள்ள டி4 சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல வந்திருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்கான எந்த ஆவணத்தையும் அவர்கள் காட்டவில்லை. புகார் நகலையோ முதல் தகவல் அறிக்கையையோ (FIR) வழங்கவில்லை.

பல்லாவரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. ஜெ. காமாட்சி குறித்து இன்ஸ்டாகிராமில் நான் அவதூறான கருத்தைப் பதிவிட்டதாக போலீசார் கூறினர். ஆனால், அப்படியொரு பதிவை நான் வெளியிடவில்லை. அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. உண்மையில், அந்த எம்.எல்.ஏ. யார் என்பதோ, அவரது சமூக வலைதளக் கணக்குகள் பற்றியோ எனக்குத் தெரியாது. அவரது பெயரைக்கூட இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை.

எனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்று போலீசாரிடம் விளக்க முயன்றேன். ஆனால், நான் சொல்வதைக் கேட்காமல், வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாடகைக் காரில் என்னை ஏற்றி அழைத்துச் சென்றனர். அது போலீஸ் வாகனம் அல்ல. குடும்பத்தினருக்குக்கூட தகவல் சொல்ல அனுமதிக்கவில்லை. என்னை அழைத்துச் செல்லும்போது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கக்கூட போலீசார் வாய்ப்பு வழங்கவில்லை.

கார் கிண்டியைக் கடந்தபோது, குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள எனது செல்போனைத் திருப்பித் தருமாறு கேட்டேன். பலமுறை கேட்ட பிறகு, சில நிமிடங்கள் மட்டும் செல்போனைப் பயன்படுத்த அனுமதித்தனர். அப்போது எனக்கு என்ன நடக்கிறது என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்தேன்.

இதற்குள் கார் பல்லாவரத்தை அடைந்தது. அங்கு சாலையோரத்தில் சுமார் 45 நிமிடங்கள் காரை நிறுத்தி வைத்திருந்தனர். அந்த நேரத்தில் போலீசார் பலருடன் தொலைபேசியில் பேசினர். அவர்களுக்கும் பல அழைப்புகள் வந்தன.

பின்னர், என்னை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல உத்தரவு வந்திருப்பதாகத் தெரிவித்தனர். திரும்பி வரும் வழியில், இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றிலிருந்து வெளியிடப்பட்ட அவதூறான கருத்தின் ஸ்கிரீன்ஷாட்டை போலீசார் என்னிடம் காட்டினர்.

அந்தக் கணக்கின் முகப்புப் படமாக எனது போட்டோ இருந்தது. ஆனால், அதன் பயனர் பெயர் @youwijayamani என்று இருந்தது. அந்தக் கணக்கு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதில் பயன்படுத்தப்பட்டிருந்த எனது போட்டோ, நான் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியபோது அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட போட்டோவாக தெரிகிறது.

வீட்டுக்குத் திரும்பியதும், அந்த இன்ஸ்டாகிராம் கணக்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டனர். அதன்படி, எனது படத்துடன் இருக்கும் அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு என்னுடையது அல்ல என்றும், அப்படியொரு கணக்கு இருப்பதே எனக்குத் தெரியாது என்றும் குறிப்பிட்டு, டி4 சங்கர் நகர் காவல் ஆய்வாளருக்கு கடிதம் எழுதிக் கொடுத்தேன்.

அந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு போலீசார் எனது செல்போனைத் திருப்பிக் கொடுத்தனர். காலை சுமார் 7.45 மணிக்கு என்னை வீட்டில் விட்டுச் சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குவதற்குக்கூட உரிய வாய்ப்பு வழங்காமல், போலீசார் என்னை நடத்திய விதம் மிகுந்த மன உளைச்சலையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் உண்மையில் பாதிக்கப்பட்டிருப்பது நான்தான். யாரோ ஒருவர் எனது புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்தி, போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கி, எனக்குத் தெரியாத ஒருவருக்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

ஆனால், அதிகாலையில் எனது வீட்டுக்கு வந்த போலீசார், என்னை ஒரு குற்றவாளியைப் போல நடத்தினர். எனது இரவு உடையிலேயே அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் வெறும் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடர்பான பிரச்சினையாக மட்டும் இருக்காது என்று அஞ்சுகிறேன். ஒருவரைத் துன்புறுத்துவதற்கும், பொதுவெளியில் அவரது நற்பெயரைக் கெடுப்பதற்கும் போலியான சமூக வலைதளக் கணக்கை உருவாக்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் எனக்கு உள்ளது.

தமிழகத்தின் பொருளாதார, அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்து வருபவன் என்ற முறையில், இதுபோன்ற சம்பவங்கள் பொது விவாதங்களிலும் கல்விசார் விவாதங்களிலும் மக்கள் பங்கேற்பதைத் தடுக்கும் என்று கவலைப்படுகிறேன். எந்தத் தவறும் செய்யாத ஒருவரின் வீட்டுக்கு அதிகாலையில் போலீசார் வந்து, அவரை அழைத்துச் செல்வது அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, என்னை சட்டவிரோதமாக அழைத்துச் சென்று தடுத்து வைத்திருந்தவர்கள், எனது புகைப்படத்தைப் பயன்படுத்திப் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியவர்கள், அவதூறான கருத்துகளைப் பதிவிட்டவர்கள், பொதுவெளியில் எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியவர்கள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் பேராசிரியர் கலையரசன் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share