தமிழகப் பொருளாதார நிலவரம் குறித்து தொடர்ந்து கருத்துகளை முன்வைத்து வரும் பொருளாதார வல்லுநரான சென்னை வளர்ச்சி மையம் MIDS பேராசிரியர் கலையரசனை, அவரது வீட்டில் இருந்து அதிகாலை 5 மணிக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
The Dravidian Model என்ற ஆங்கில நூலின் ஆசிரியர்களில் ஒருவரான கலையரசன், தமிழ்நாட்டின் பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகளுக்காக அறியப்பட்டவர்.
சமீபத்தில் புதிய தலைமுறை டிவி சேனலுக்கு கலையரசன் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு குறித்து கவலை தெரிவித்திருந்தார். குறிப்பாக, தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு அதிகமாக இருப்பதாகவும், இதைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் கலையரசன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் சென்னை அடையாறில் உள்ள கலையரசனின் வீட்டுக்கு சாதாரண உடையில் 3 போலீசார் சென்றுள்ளனர். வீட்டின் கதவைத் திறந்த கலையரசனிடம் பெயரைக் கேட்ட போலீசார், பின்னர் அவரது செல்போனை வாங்கிக் கொண்டு விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர். எந்த வழக்கு, என்ன புகார் என்ற விவரங்களை கலையரசனிடம் போலீசார் முதலில் தெரிவிக்கவில்லை.
பல்லாவரத்தை அடுத்த பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார்தான், வாடகைக் காரில் கலையரசனை அழைத்துச் சென்றுள்ளனர்.
என்ன புகார்?
பின்னர்தான், பல்லாவரம் தொகுதி தவெக எம்எல்ஏ காமாட்சியின் இன்ஸ்டாகிராம் பதிவில் தகாத வார்த்தைகளால் கருத்து பதிவிட்டதாகக் கூறி கலையரசனை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே கிடையாது என்றும், சம்பந்தப்பட்ட கருத்தைத் தான் பதிவிடவில்லை என்றும் கலையரசன் மறுத்துள்ளார்.
இதற்கிடையே, குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தகவல் தெரிவிக்க செல்போனைத் தருமாறு அவர் கேட்டுள்ளார். பின்னர் சிறிது நேரம் செல்போனைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட நிலையில், தனக்கு நடந்த சம்பவத்தை நண்பர்களிடம் தெரிவித்தார் கலையரசன்.
பல்லாவரம் அருகே சென்றபோது காரை சாலையோரம் நிறுத்திய போலீசார், உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியுள்ளனர். பின்னர் கலையரசனை மீண்டும் அடையாறில் உள்ள வீட்டுக்கே அழைத்துச் சென்று விட்டுள்ளனர்.


போலி இன்ஸ்டாகிராம் கணக்கு?
கலையரசனை அழைத்துச் சென்றதற்குக் காரணமான இன்ஸ்டாகிராம் கணக்கில், அவரது போட்டோ பயன்படுத்தப்பட்டிருந்தாலும், கணக்கின் பெயர் விஜய மணிகண்டன் என இருந்தது. அந்தப் போட்டோ ஹார்வர்ட் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 5-ந் தேதி உருவாக்கப்பட்ட இந்த இன்ஸ்டா பக்கத்தில் 3 பதிவுகள் மட்டுமே போடப்பட்டுள்ளன.
இந்த இன்ஸ்டா கணக்குக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கலையரசனிடம் போலீசார் கடிதம் எழுதியும் வாங்கியுள்ளனர். இதையடுத்து, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தமிழக காவல்துறை டிஜிபிக்கு கலையரசன் புகார் அனுப்பியுள்ளார்.

தனது போட்டோவை வேறு ஒருவர் தவறாகப் பயன்படுத்தியிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட தன்னையே குற்றவாளியைப் போல போலீசார் நடத்தியதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்க வேண்டும் என்றும், அதன் பின்னணியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலையரசன் வலியுறுத்தியுள்ளார்.
சிபிஎம் கண்டனம்
பேராசிரியர் கலையரசனுக்கு எதிரான போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை வளர்ச்சி மையம் MIDS பேராசிரியர் கலையரசன் அவர்கள் இன்று விடியற்காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து எவ்வித முகாந்திரமும் இல்லாமல் சீருடை அணியாத காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது வன்மையான கண்டனத்திற்குரியது.
நள்ளிரவு கைது, விடியற்காலை கைது என்பதெல்லாம் காவல்துறை ராஜ்யம் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. புகார் இருந்தால் முறையாக வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பி விசாரித்து இருக்கலாம். பிரபலமான பேராசிரியரை இப்படி நடத்தி இருப்பது சகித்துக் கொள்ள முடியாதது” என தெரிவித்துள்ளார்.
