தேனி ‘சம்பவம்’: தப்பி ஓடிய 17 கைதிகளும் பிடிபட்டனர்!

Published On:

| By Mathi

TN Police

தேனி சிறையில் இருந்து தப்பி ஓடிய 17 கைதிகளும் பிடிபட்டுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக போலீசார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி சிறையிலிருந்து 26.10.2026 அன்று பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 17 கைதிகள் தப்பியோடினர்.

ADVERTISEMENT

இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் டாக்டர். மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, 24 மணி நேரத்திற்குள் 13 கைதிகள் கைது செய்யப்பட்டனர். மீதமிருந்த 4 கைதிகளும் 36 மணி நேரத்திற்குள் பிடிக்கப்பட்டனர். இதன் மூலம் தப்பியோடிய 17 கைதிகளும் முழுமையாகப் பிடிக்கப்பட்டனர்.

இந்நடவடிக்கையில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் டாக்டர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டினார்கள்.

ADVERTISEMENT

என்ன நடந்தது?

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி சிறையில் அக். 26-ந் தேதி இரவு 17 விசாரணைக் கைதிகள் தப்பி ஓடினர். இந்தச் சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகளில் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக மற்ற கைதிகள் கூறியுள்ளனர். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுவதாகக் கூறி சிறைக் காவலர்களை அழைத்துள்ளனர்.

இதையடுத்து சிறை அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்ற காவலரை கைதிகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் மற்ற காவலர்களையும் தாக்கிவிட்டு சிறையின் பிரதான வாயில் வழியாக 17 பேரும் தப்பிச் சென்றுள்ளனர். இதில் சிறைக் காவலர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் காயமடைந்தனர்.

ADVERTISEMENT

இந்தச் சம்பவம் நடந்தபோது பணியில் இருக்க வேண்டிய 9 சிறைத்துறை ஊழியர்களில் 4 பேர் மட்டுமே இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், சிறையின் கண்காணிப்புக் கோபுரங்களில் காவலர்கள் பணியில் இல்லை என்றும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமான கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, சிறையில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாததே கைதிகள் தப்பியதற்குக் காரணம் என சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்திருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக 9 சிறைத்துறை ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share