கோயில் நிலம் ஆக்கிரமிப்பு : ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வழக்கில் சேர்ப்பு!

Published On:

| By Kavi

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எட்டு பேரை சேர்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கரூர் பசுபதீஸ்வரர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். 

ADVERTISEMENT

அதில் பசுபதீஸ்வரர் கோயில் நூறாண்டுகள் பழமையானது. இந்த கோயிலுக்கு சொந்தமாக 3054 ஏக்கர் நிலங்கள் இருந்தன. 

தற்போது 150 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. 

ADVERTISEMENT

மற்ற நிலங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு 200 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். 

இங்கு வணிக வளாகங்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தேன். இதை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற உத்தரவிட்டது. 

ADVERTISEMENT

ஆனால் இந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. எனவே  அறநிலையத்துறை இணை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று (அக்டோபர் 28) விசாரணைக்கு வந்தது. 

அப்போது கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், 

ஐஏஎஸ் அதிகாரிகளான கே.எஸ்.பழனிசாமி – வருவாய் துறை செயலாளர், 

ஏ. கார்த்திக் – உள்துறை செயலாளர், 

வி. ராஜாராமன் – சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை செயலாளர், 

பி.சந்திரமோகன் – வருவாய் நிர்வாக ஆணையர், 

ராஜேஷ் லக்காணி – நில நிர்வாக ஆணையர், 

டிஜி வினய் – அறநிலையத்துறை ஆணையர், 

சி.முத்துக்குமரன்- கரூர் மாவட்ட ஆட்சியர், 

ஐபிஎஸ் அதிகாரியான மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்திரவிட்டனர். 

இதில் அறநிலையத்துறை ஆணையர் வினய், வரும் 5ஆம் தேதி நேரில் ஆஜராகி நீதிமன்ற உத்தரவுகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை என்பது குறித்தும் இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share