வால்பாறையில் விதிமீறிய கட்டிடங்களுக்கு சீல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

வால்பாறையில் கட்டிட அனுமதி மற்றும் பயன்பாட்டு விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்ட காட்டேஜ்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறையில் உரிய கட்டிட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் முறையான உரிமம் இல்லாமல் செயல்படும் ஹோம்ஸ்டே, ரிசார்ட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ரத்தினசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் என்ற வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் வால்பாறையில் உரிய உரிமம் மற்றும் திட்ட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற்ற விசாரணையில், அனுமதியற்ற வணிகக் கட்டிடங்கள் தொடர்பாக 24 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விரிவான ஆய்வு மேற்கொள்ள கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 25-ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வால்பாறை நகராட்சி ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், நகராட்சி எல்லைக்குட்பட்ட 204 வணிகக் கட்டிடங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998-ன் பிரிவு 145-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து 90 கட்டிட உரிமையாளர்களிடமிருந்து பதில்கள் பெறப்பட்டிருந்தன. அவர்களில் 38 பேர் கட்டிடத் திட்ட ஆவணங்களுடன் பதிலளித்திருந்தனர். 52 கட்டிடங்களுக்கு உரிய கட்டிட அனுமதி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அனுமதியற்ற கட்டிடங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சட்டப்படி சீல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தொடர்புடைய ஹோம்ஸ்டேகளின் உரிமம் மற்றும் அனுமதிகளைச் சரிபார்த்து விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நகராட்சி எல்லைக்கு வெளியே உள்ள பகுதிகளிலும் அனுமதியற்ற கட்டிடங்களை அடையாளம் கண்டு அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வால்பாறையில் கட்டிட அனுமதி மற்றும் பயன்பாட்டு விதிமுறைகளை மீறி காட்டேஜ்கள் செயல்படுவதாகத் தொடரப்பட்ட மற்றொரு வழக்கின் அடிப்படையிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நோட்டீஸ் வழங்கினர். இதுதொடர்பாக வழங்கப்பட்ட நோட்டீஸ்களை எதிர்த்து சில காட்டேஜ் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த அக்டோபர் 7-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998-ன் பிரிவு 145-ன் கீழ் வழங்கப்பட்ட விளக்கம் கேட்கும் நோட்டீஸ்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

ADVERTISEMENT

நோட்டீஸ் பெற்றவர்கள் தங்களிடம் உள்ள கட்டிட அனுமதி, திட்ட ஒப்புதல் மற்றும் உரிமம் தொடர்பான ஆவணங்களுடன் ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கலாம் என்றும், அவற்றைப் பரிசீலித்து சட்டப்படி அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், மலைப்பகுதிகளில் கட்டிடங்கள் கட்டுவதற்கான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் மலைப்பகுதிகளுக்கான  கட்டிட விதிகளைப் பின்பற்றி அனுமதி வழங்குவதும், விதிமீறல்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதும் அவசியம் என நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக சோலையாறு அணை பகுதியில் 7 காட்டேஜ்களுக்கு வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர். ஊட்டியைத் தொடர்ந்து வால்பாறையிலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை தங்கும் விடுதி உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share