என் புள்ள ‘மயிலாப்பூர் கிங்’.. சொத்தை வித்தாச்சும் ராஜா மாதிரி இறுதி ஊர்வலம் – சென்னையில் கொல்லப்பட்ட ‘ரவுடி’யின் தாய்

Published On:

| By Mathi

Adyar Murder

சென்னை அடையாறில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட மயிலாப்பூரைச் சேர்ந்த மைத்ரேயனின் தாய், தனது மகனின் கொலைக்கு போலீசாரே காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளார். மகனைக் கொலை செய்தவர்கள் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு வருவதாகவும், தனது ஒரே மகனை ராஜா போல இறுதி ஊர்வலமாக கொண்டு செல்வேன் என்றும் அவர் கண்ணீருடன் பேசும் வீடியோ வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் மைத்ரேயன் (30). போலீசாரின் சி பிரிவு சரித்திரப் பதிவேட்டில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. நேற்று (அக்.27) காலை 11.30 மணியளவில் அடையாறு இந்திரா நகர் வாட்டர் டேங்க் அருகே மெயின் ரோட்டில் மைத்ரேயனை ஒரு கும்பல் வழிமறித்தது. அவர்களிடமிருந்து தப்பி ஓடிய மைத்ரேயனை அந்த கும்பல் விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

ADVERTISEMENT

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அடையாறு போலீசார், மைத்ரேயனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு திரண்ட மைத்ரேயனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

அப்போது செய்தியாளர்களிடம் மைத்ரேயனின் தாய் கூறியதாவது: எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பையன். காலையில என் புள்ளையை வெட்டிட்டாங்க சார். அவங்க அப்பாவையும் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போய் உட்கார வச்சிருக்காங்க.

என் பையனை வெட்டுன நாலு மணி நேரத்துலேயே அந்த ஃபுட்டேஜை இன்ஸ்டாவில் போட்டிருக்காங்க. ‘நாங்கதான் மயிலாப்பூர் கிங்கு’ன்னு சொல்லிக்கிட்டு இன்னமும் இன்ஸ்டாவில் சுத்திக்கிட்டு இருக்காங்க.

ADVERTISEMENT

மூணு பேர் வந்து வெட்டுன ஃபுட்டேஜ் என்கிட்ட இருக்கு சார். வெட்டுன வீடியோவை அனுப்பி, இன்ஸ்டாவில் முழுசா போட்டுக்குறாங்க. இது என்ன சார் ஆட்சி நடக்குது? வெட்டுன பசங்க வெளியே சுத்துறாங்க. போலீஸ் இன்னும் அரெஸ்ட் பண்ணாம என்ன பண்றாங்க?

போலீஸ் ஸ்பெஷல் டீம்தான் காரணம்

இந்தப் பசங்க எல்லாமே கஞ்சா விக்கிறாங்க சார். போலீஸ்காரங்க ஸ்பெஷல் டீம் இதுக்கு உடந்தை. இவங்களுக்கு எல்லாம் ரூட் எடுத்துக் கொடுத்ததே ஸ்பெஷல் டீம்தான்.

என் பையனுக்கு எதிரிகள் இருக்காங்கன்னு தெரிஞ்சும், இந்த 15 நாளும் E1 ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்துப் போடச் சொல்லியிருக்காங்க. நானும் வேலை செய்றவதான் சார். வேலையை விட்டுட்டு என் புள்ளையைக் கூட்டிட்டுப் போய் கையெழுத்துப் போட வச்சிட்டு வந்தேன்.

என் பையன் கையெழுத்துப் போட வரலன்னா என்னையே ரிமாண்ட் பண்ணுவோம்னு மிரட்டுறாங்க. இப்படி இருக்கும்போது என் பையனுக்கு எப்படிப் பாதுகாப்பு இருக்கும்?

என் பையன் மேல போட்ட கஞ்சா கேஸ் பொய் கேஸ் சார். அவனை எங்கிருந்தோ பிடிச்சிட்டு வந்து லைட் ஹவுஸ் பக்கத்துல கூட்டிட்டுப் போய் கஞ்சா கேஸ் போட்டாங்க. ஒரு மாசம் உள்ளே வச்சிருந்தாங்க. இப்பதான் வெளியே கூட்டிட்டு வந்தேன்.

என் பையன் மேல போட்டது எல்லாமே பொய் கேஸ், புட்-அப் கேஸ். இந்தக் குழந்தைங்க வாழ்க்கையைக் கெடுத்தது முழுக்க முழுக்க ஸ்பெஷல் டீமும் E1 ஸ்டேஷனும்தான் சார். பசங்க மேல பொய் கேஸ் போட்டு ஒவ்வொரு உயிரும் இப்படித்தான் போகுது.

சிஎம் விஜய் என்ன பண்றாரு?

இவ்வளவு நடக்கும்போது சி.எம். சார் என்னதான் பண்றாரு? கேட்டா, ‘சி.எம்.தான் பசங்களை அரெஸ்ட் பண்ணச் சொல்லி ஆர்டர் போட்டிருக்காரு’ன்னு சொல்றாங்க. அப்படின்னா இன்னும் ஏன் அரெஸ்ட் பண்ணல?

என் பையனை வெட்டுனவங்க இன்ஸ்டாவில் ‘மயிலாப்பூர் கிங்கு நாங்கதான்’னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆனா பெத்த தாய்க்கு அவன் உடலைக்கூட இன்னும் காட்டல.

எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பையன் சார். இன்னைக்கு அவனையும் சாவடிச்சிட்டாங்க. எனக்காக இவ்வளவு ஜனங்க வந்து நிக்கிறாங்க. அவங்களையும் ரொம்பக் கஷ்டப்படுத்துறாங்க.

சொத்தை வித்தாச்சும் ராஜா மாதிரி அனுப்புவேன்

என் புள்ளை மயிலாப்பூர் மைத்ரேயன் கிங்.. மைத்ரேயன் கிங் சார்.. என் பையனை நான் எடுப்பேன். அவன் சாவு சூப்பரா நடக்கணும். ராஜா மாதிரி அவனை அனுப்பி வைப்பேன். நான் அழ மாட்டேன் சார். சொத்தை வித்தாச்சும் என் புள்ளையை ராஜா மாதிரி அனுப்பி வைப்பேன். என் புள்ளை மயிலாப்பூர் மைத்ரேயன் கிங். இவ்வாறு கொல்லப்பட்ட மைத்ரேயனின் தாய் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share