வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ அதி தீவிர புயல் இன்னும் சற்று நேரத்தில் இன்று (அக்.28) அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் ஆந்திராவின் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, ஏனாமுக்கு தெற்கே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அர்னாப் புயல் நேற்று (அக்.27) இரவு 11.30 மணி நிலவரப்படி, ஆந்திராவின் நரசாபுரத்திலிருந்து தென்கிழக்கே 50 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கே 70 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
மேலும், மசூலிப்பட்டினத்திலிருந்து கிழக்கே 100 கி.மீ. தொலைவிலும், பாபட்லாவிலிருந்து கிழக்கு – வடகிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் புயல் நிலைகொண்டிருந்தது.
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் புயல் நகர்ந்துள்ளது.
150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று
அர்னாப் புயல் வடமேற்கு திசையில் திரும்பி, ஆந்திராவின் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, ஏனாமுக்கு தெற்கே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் 150 கி.மீ. வரை அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆந்திராவை தாக்கத் தொடங்கிய புயல்
அர்னாப் புயலின் வடக்குப் பகுதி ஏற்கனவே ஆந்திராவின் நிலப்பகுதிக்குள் நுழைந்து தாக்க தொடங்கிவிட்டது. இதனால் புயலின் தாக்கம் கடலோரப் பகுதிகளில் தொடங்கியது.
புயலின் மையம் கடற்கரைக்கு மிக அருகில் வந்துவிட்டதால், அடுத்த 1 முதல் 2 மணி நேரத்தில் கரையைக் கடக்கும் நிகழ்வு தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் புயல் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
