சுங்கச்சாவடிகளுக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு மத்திய அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இனி ஆண்டுக்கு ரூ.1,500 அல்லது ரூ.3,000 செலுத்தி சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லலாம். இந்த புதிய திட்டம் நவம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை தினமும் கடந்து செல்லும் உள்ளூர் மக்களின் செலவைக் குறைப்பதற்காக இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் இந்தச் சலுகை?
சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ. தூரத்துக்குள் வசிப்பவர்கள் இந்தச் சலுகையைப் பெறலாம். ஆனால், சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும். வாடகை மற்றும் வணிக வாகனங்களுக்கு கிடையாது.
நகராட்சி அல்லது நகர எல்லைக்கு வெளியே இருக்கும் சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ரூ.1,500 செலுத்தினால் போதும்.
நகராட்சி அல்லது நகர எல்லைக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்த வேண்டும்.
இந்தச் சலுகையைப் பெற வாகனத்தில் FASTag ஆக்டிவ்வாக இருக்க வேண்டும்.
எல்லா சுங்கச்சாவடிகளிலும் இதனை பயன்படுத்த முடியாது. எந்தச் சுங்கச்சாவடிக்காக இந்தப் பயண அட்டையை வாங்குகிறோமோ, அந்தச் சுங்கச்சாவடியில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஏற்கெனவே உள்ள மாதாந்திர பாஸ் அல்லது புதிய வருடாந்திர பாஸ் இரண்டில் எது தேவையோ அதைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
சுங்கச்சாவடிக்கு அருகே மாற்றுச் சாலை அல்லது சர்வீஸ் சாலை இருந்தால் இந்தச் சலுகை கிடைக்காது.
அதேபோல, பயணிக்கும் தூரத்துக்கு ஏற்ப சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் சில தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளிலும் இந்தச் சலுகை கிடையாது.
பாஸ் எங்கே வாங்குவது?
நவம்பர் 1-ந் தேதி முதல் இந்தச் சலுகை பொருந்தும் சுங்கச்சாவடிகளிலேயே வருடாந்திர பாஸ் வாங்கலாம்.
டிசம்பர் 1-ந் தேதி முதல் Rajmargyatra மொபைல் செயலி மூலமாகவும் வாங்கலாம்.
இந்தக் கட்டணம் ஆண்டுதோறும் மாற்றப்படலாம். கட்டணம் மாற்றப்பட்டால் ஏப்ரல் 1-ந் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும்.
நாடு முழுவதும் 13 கோடிக்கும் அதிகமான FASTag-கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சுங்கச்சாவடிகளுக்கு அருகே வசிக்கும் மக்களின் பயணச் செலவைக் குறைக்க இந்தப் புதிய திட்டம் உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
